தோசைக்கல்லை தூக்கி வீசிய அஞ்சலி: இயக்குனர் நெற்றியில் தையல்!
படப்பிடிப்பில் அஞ்சலி வீசிய தோசைக்கல் எதிர்பாராதவிதமாக இயக்குனரின் நெற்றியில் பட்டதால் அவருக்குத் தையல் போடப்பட்டது.
பூ, கண்டேன் காதலை, சகுனி, ஒரு ஊர்ல ரெண்டு ராஜா, சண்டிவீரன் உட்பட பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர், பி.ஜி.முத்தையா. இவர் விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன் நடித்த ’மதுர வீரன்’ படத்தை இயக்கி இருந்தார்.
இவர் இப்போது, ‘லிசா’ என்ற படத்தைத் தயாரித்து வருகிறார். ஹாரர் படமான இதில் அஞ்சலி ஆக்ஷன் ஹீரோயினாக நடிக்கிறார். அறிமுக இயக்குனர் ராஜு விஸ்வநாத் இயக்கும் இந்தப் படம், 3டி டெக்னாலஜி ஸ்டீரியோ ஸ்கோப்பில் உருவாகிறது. இந்த முறையில் இந்தியாவில் தயாராகும் முதல் ஹாரர் படம் இதுதானாம்!
’ஏமாலி’ படத்தில் நடித்த ஷாம், மக்ராந்த் தேஷ்பாண்டே உட்பட பலர் நடிக்கின்றனர். இந்தப் படத்தின் சண்டை காட்சி சென்னை அருகே நேற்று படமாக்கப்பட்டது. கதைப்படி,
தோசைக்கல்லை தூக்கி, கேமரா முன் வீசவேண்டும் அஞ்சலி. இயக்குனர் ஆக்ஷன் என்றதும் தோசைக்கல்லை வீசினார். மெதுவாக வீசுவதற்குப் பதில் கொஞ்சம் வேகமாக வீச, எதிர்பாராத விதமாக இயக்குனரின் நெற்றியைப் பதம் பார்த்துவிட்டது, தோசைக்கல்!
இதனால் அவருக்கு நெற்றி கிழிந்து ரத்தம் கொட்டியது. படப்பிடிப்பை நிறுத்திவிட்டு அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அடிபட்ட இடத்தில் தையல் போடப்பட்டது. தனது செயலுக்கு இயக்குனரிடம் வருத்தம் தெரிவித்தார் அஞ்சலி. ’எதிர்பாராமல் நடந்ததுதானே’ என்றார் இயக்குனர். இந்த சம்பவம் படப்பிடிப்பில் பரபரப்பை ஏற்படுத்தியது.