“நடிகர்கள் யாரும் முதலமைச்சராக முடியாது” - சத்யராஜ்
இனி நடிகர்கள் யாரும் தமிழ்நாட்டில் முதலமைச்சராக முடியாது என நடிகர் சத்யராஜ் தெரிவித்துள்ளார்.
சத்யராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகி சமீபத்தில் திரைக்கு வந்தப் படம் 'கனா'. தமிழில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் இத்திரைப்படம் மலையாளத்தில் டப் செய்யப்பட்டு கடந்த வெள்ளிக்கிழமை திரைக்கு வந்தது. இதன் விளம்பர நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட நடிகர் சத்யராஜ், மலையாள தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்தார்.
அதில் ''எனது 41 வருட சினிமா பயணத்தில் அரசியல் எப்போதும் என்னைக் கவர்ந்ததில்லை. முதல்வர் பதவிக்கு தியாகமும், அர்ப்பணிப்பு உணர்வும் வேண்டும். முதலமைச்சராக ஆக வேண்டுமென்றால் ஆரம்பத்திலிருந்து மக்களின் பிரச்னைகளைப் புரிந்துகொண்டு நாம் பயணிக்க வேண்டும்.
சினிமாவில் உள்ள புகழைப் பயன்படுத்தி முதல்வராக வேண்டும் என்பது சரியான முறையல்ல. இனி சினிமா நடிகர்கள் யாரும் தமிழகத்தில் முதலமைச்சராக வர முடியாது. அதனை வரும் தேர்தல்களில் நேரடியாக பார்க்க முடியும்'' என்று தெரிவித்தார்.
மேலும் ''நடிகர்களின் அரசியல் என்பது முதலமைச்சர் பதவியை முன்னிறுத்தி செல்கிறதே தவிர மக்கள் சேவையை முன்னிறுத்தி செல்வதாக தெரியவில்லை. தமிழகத்திலும் நல்லகண்ணுவைப் போன்ற கம்யூனிஸ்ட்காரர்கள் அதிகாரத்திற்கு வரவேண்டும் என நான் விரும்புகிறேன்'' என்று தெரிவித்தார்.

