தமிழக அரசின் கொரோனா விழிப்புணர்வு விளம்பரங்களில் திரைத்துறையினர்!
கொரோனா தடுப்பு நடவடிக்கையில் தீவிரமாக இறங்கியுள்ள தமிழக அரசு, பல்வேறு விழிப்புணர்வு பரப்புரையிலும் ஈடுபட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக திரைத்துறையினரை கொண்டு கொரோனா தடுப்பு விழிப்புணர்வு விளம்பரத்தை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
கொரோனா இல்லா தமிழகத்தை உருவாக்குவது மக்களின் கடமை நம்மையும் காத்து நாட்டு மக்களையும் காப்போம் என்ற தலைப்பில் அண்மையில் தமிழக அரசு வெளியிட்ட கொரோனா தடுப்பு விளம்பரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினே தோன்றி இரட்டை முகக் கவசம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இதன் தொடர்ச்சியாக தற்போது திரைத்துறையினரை கொண்டும் தமிழக அரசு கொரோனா தடுப்பு விழிப்புணர்வு விளம்பரங்களை வெளியிட்டுள்ளது.
நடிகர்கள் சிவகுமார், நாசர், சத்யராஜ், ஜெயம்ரவி, சிவகார்த்திகேயன், நகைச்சுவை நடிகர் யோகிபாபு ஆகியோர் தமிழக அரசு வெளியிட்டுள்ள கொரோனா தடுப்பு விளம்பரத்தில் தோன்றி தடுப்பூசி, முகக்கவசம், தனிமனித இடைவெளி, ஊரடங்கை கடைப்பிடிப்பது குறித்து அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.