‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ தமிழ் ரீமேக்கில் இணைந்த நடிகர் யோகி பாபு!
மலையாளத்தில் வெற்றியும் பாராட்டுகளையும் பெற்ற ’தி கிரேட் இந்தியன் கிச்சன்’ தமிழ் ரீமேக்கில் நடிகர் யோகி பாபு இணைந்துள்ளார்.
சமீபத்தில் கருத்தியல் ரீதியில் தமிழ்ப் பரப்பிலும் அதிகம் விவாதிக்கப்பட்ட மலையாள படம், 'தி கிரேட் இந்தியன் கிச்சன்'. இயக்குநர் ஜோ பேபி இயக்கிய இந்த சினிமா Neestream தளத்தில் வெளியானது. சலு கே தாமஸ் ஒளிப்பதிவு ,சூரஜ் வெஞ்சரமுடு, நிமிஷா சஜயன் ஆகியோரின் யதார்த்த நடிப்பு இப்படத்திற்கு கூடுதல் பலம். இந்தியாவைப் பொருத்தமட்டில் குடும்பம் என்கிற அமைப்பு எப்படி ஒரு பெண்ணின் உழைப்பை சுரண்டுகிறது என்பது குறித்தும், இந்தியப் பெண்களின் வாழ்வியல் சிக்கலையும் மிக அழுத்தமாக பதிவு செய்தது 'தி கிரேட் இந்தியன் கிச்சன்'.
இந்நிலையில், இப்படத்தின் தமிழ் ரீமேக்கை இயக்குநர் கண்ணன் இயக்கி வருகிறார். ஐஸ்வர்யா ராஜேஷ் ஹீரோயினாக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக பாடகி சின்மயியின் கணவர் நடிகர் ராகுல் ரவீந்திரன் நடிக்கிறார்.
கடந்த மாதம் முதல் இப்படத்தின் படப்பிடிப்புகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், நடிகர் யோகி பாபு இப்படத்தில் முக்கியமான ரோலில் நடிக்கிறார். அவர் நடித்துள்ள புகைப்படங்கள் தற்போது வெளியாகி இருக்கின்றன.