“நெஞ்சில் குடி இருக்கும்” - பிகில் சர்ச்சைக்கு விவேக் விளக்கம்
‘பிகில்’ ஆடியோ விழாவில் பேசியது குறித்து நடிகர் விவேக் விளக்கம் அளித்துள்ளார்.
கடந்த வாரம் நடிகர் விஜய் நடித்த ‘பிகில்’ திரைப்படத்தின் பாடல் வெளியிட்டு விழா சென்னை தாம்பரத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது. அந்த விழாவில் பேசிய நடிகர் விவேக், ‘நெஞ்சில் குடியிருக்கும்’ என்ற சிவாஜியின் பாடல் விஜய்யால் பிரபலமாகியுள்ளது எனத் தெரிவித்தார்.
விவேக்கின் இந்த கருத்துக்கு கண்டன அறிக்கை வெளியிட்ட சிவாஜி சமூகநலப் பேரவை, ‘பிகில்’ ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் விவேக் ‘இரும்புத்திரை’ திரைப்படத்தின் “நெஞ்சில் குடியிருக்கும்” என்று தொடங்கும் அருமையான பாடலை கிண்டலடித்திருக்கிறார். ஒரு நடிகரை காக்காய் பிடிப்பதற்காக, ஏற்கனவே வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ள ஒரு பாடலை கிண்டலடிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது” என குறிப்பிட்டிருந்தனர்
சிவாஜி சமூகநலப் பேரவையின் கண்டன அறிக்கைக்கு தனது ட்விட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ள நடிகர் விவேக், ''1960ல் ‘இரும்புத்திரை’ படத்தில் நடிகர் திலகம் சிவாஜி பாடிய பாடலின் முதல் வரி “நெஞ்சில் குடி இருக்கும்”. அப்போது அது காதல் உணர்வைக் குறித்தது. ஆனால் இப்போது சகோ விஜய் அதை சொல்லும் போது மந்திர சக்தி வார்த்தையாக இருக்கிறது. இதுவே நான் பேசியது. அன்பு உள்ளங்கள் புரிந்து கொள்க'' என தெரிவித்துள்ளார்