தமிழ் சினிமாவில் நகைச்சுவை ஆயுதமேந்திய சமுதாய சிற்பி நடிகர் விவேக்!
நகைச்சுவையை ஆயுதமாகக் கொண்டு சமூக விழிப்புணர்வு கருத்துகளை மக்கள் மனதில் ஆழமாக விதைத்தவர் நடிகர் விவேக் என்றால் அது மிகையல்ல.
சொல்ல வேண்டிய கருத்துகளை முகத்தில் அறைவது போல சொல்லிவிடலாம். அதனை நகைச்சுவை என்ற தேன் தடவி மக்கள் மனதில் அழுத்தமாக பதியவைத்துவிடலாம் என்பதற்கு உதாரணம், நடிகர் விவேக்கின் நகைச்சுவைக் காட்சிகள். சாதிக்கொடுமைக்கு எதிராகவும், தீண்டாமைக்கு எதிராகவும் சாட்டையடிகளாக சுழன்றன அவரது காமெடி வசனங்கள்.
பெண் குழந்தைகள் கருவிலேயே கொல்லப்படுவதையும், பிறந்தது பெண் குழந்தையாக இருந்தால் கள்ளிப்பால் கொடுத்து கொலை செய்யும் வழக்கத்தையும் சாடின அவரது நடிப்பும், வசனங்களும்.
கூவத்தில் குளித்து எழும் காட்சிகளாலும், 100 பெரியார் வந்தாலும் உங்களையெல்லாம் திருத்த முடியாது என்ற மூட நம்பிக்கைகளை சிதறடித்த காட்சிகளாலும் என்றென்றும் நினைவில் நிற்பவர்.
என்எஸ் கிருஷ்ணன் தனது நகைச்சுவைக் கருத்துகளால் கலைவாணர் என்று அழைக்கப்பட்ட நிலையில், அவரது பாணியை பின்பற்றியதால் 'சின்னக் கலைவாணர்' என அழைக்கப்பட்டார்.
திரைப்படங்கள் மட்டுமின்றி அரசின் விழிப்புணர்வு விளம்பரங்கள் மூலமாகவும் மனதை தொட்டவர் விவேக். பிளாஸ்டிக் இல்லா தமிழகம், கொரோனா விழிப்புணர்வு என பல அரசு விளம்பரங்களில் தோன்றியவர்.
திரையரங்குக்கு வருவோரை சிரிக்க மட்டும் வைக்காமல், சிந்திக்கவும் வைத்து அனுப்பியதால்தான் அவர் 'சின்னக் கலைவாணர்' என அழைக்கப்படுகிறார். எண்ணற்ற மக்களை சிரிக்க வைத்து கவலைகளை மறக்க வைத்த இந்த மக்களின் கலைஞன், தனது மறைவால் இன்று அழ வைத்திருக்கிறார்.
வாழ்க்கைக் குறிப்பு:
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் 1961-ல் பிறந்தவர் நடிகர் விவேக். சென்னைக்கு வந்து தலைமைச் செயலகத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த நேரத்தில்தான், Madras Humour club-ல் அவர் செய்த காமெடி நிகழ்ச்சிகளுக்கு வரவேற்பு கிடைக்கத் தொடங்கியது. அதன் வழியான தொடர்புகளே, இயக்குநர் சிகரம் பாலச்சந்தரின் அறிமுகத்தையும் பெற்றுத்தர பின்னர் அவருடன் இணைந்து பணியாற்றத் தொடங்கினார் விவேக்.
அதன்பிறகு அவருக்கு 1987-ல் மனதில் உறுதி வேண்டும் படத்தில் நடிக்கவும் வாய்ப்புக் கொடுத்தார் பாலச்சந்தர். அதன்பிறகு சிறுசிறு வேடங்களில் நடித்து வந்த விவேக், உழைப்பாளி, வீரா போன்ற படங்களால் ரசிகர்களுக்கு பரிச்சயமான நடிகராகவும் ஆனார்.
ஒரு நடிகராக விவேக்கிற்கு தனி அடையாளத்தைக் கொடுத்த திரைப்படம் 'காதல் மன்னன்'. அதன்பிறகு, அவர் நடித்த படங்களுக்கு கிடைத்த வரவேற்பால், அடுத்தடுத்து நடிக்கும் வாய்ப்புகள் வரத் தொடங்கின. அதனால், 2000 மற்றும் 2001-ம் ஆண்டுகளில் மட்டுமே சுமார் 50-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார் விவேக்.
அஜித் உடன் வாலி, விஜய் உடன் குஷி என முன்னணி நடிகர்களின் படங்களின் வரத் தொடங்கிய விவேக், தன் காமெடியில் கருத்தையும் முன்வைக்கத் தொடங்கினார். அதற்கு ரசிகர்களிடத்தில் கிடைத்த வரவேற்பே, சின்னக் கலைவாணர் என அவர் அழைக்கப்படவும் காரணமானது.
அந்நியன், சிவாஜி என தமிழ் சினிமாவின் பிரமாண்ட படைப்புகளிலும் காமெடியனாக கலக்கிய விவேக்கின் திரை வாழ்க்கையில் 'படிக்காதவன்' திரைப்படம் மைல்கல்லாக அமைந்தது. இந்தப் படத்தில் Don-ஆக வரும் அவரது காமெடி எப்போது பார்த்தாலும் எல்லோரையும் வயிறு குலுங்க சிரிக்க வைக்கும்.
காமெடி நடிகராக மட்டும் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் விவேக் முத்திரை பதித்திருக்கிறார். அதேபோல், கதையின் நாயகனாகவும் வெள்ளைப் பூக்கள் உள்ளிட்ட படங்களில் விவேக்கின் நடிப்பு வெகுவாக பாராட்டப்பட்டிருக்கிறது.
திரைத்துறையின் விவேக்கின் பங்களிப்பை போற்றும் வகையில், 2009ம் ஆண்டு பத்மஸ்ரீ விருதும், 2006-ல் தமிழக அரசின் கலைவாணர் விருதும் வழங்கப்பட்டிருக்கிறது. அதோடு, சிறந்த நகைச்சுவை நடிகராக தமிழக அரசின் விருதை 5 முறையும், பிலிம்பேர் விருதை 3 முறையும் பெற்றிருக்கிறார் விவேக்