60 ஏழை மாணவர்களுக்கு உயர் கல்வி பயில உதவி செய்த நடிகர் விஷால்
தனது அறக்கட்டளை மூலம் நடிகர் விஷால் 60 ஏழை மற்றும் விவசாயக் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு உயர்கல்வி பயில உதவி வழங்கி உள்ளார்.
நடிகர் விஷால் நடிப்பில் விரைவில் ‘எனிமி’, ’விஷால் 31’ உள்ளிட்டப் படங்கள் வெளியாகவிருக்கின்றன. ‘துப்பறிவாளன் 2’ படத்தையும் இயக்கி வருகிறார் விஷால். திரைப்படங்களில் நடித்துக்கொண்டே, தனது அம்மா தேவி பெயரில் ’தேவி’ என்ற அறக்கட்டளையை ஆரம்பித்து பல்வேறு உதவிகளை செய்து வருகிறார். ஏற்கனவே, இந்த அறக்கட்டளை மூலம் கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட சாலையோர மக்கள் 500 பேருக்கு தினமும் உணவு, குடிநீர் வழங்கி வந்தார். அதோடு, தன்னுடைய தேவி அறக்கட்டளை மூலம் வருடம்தோறும் ஏழைகளுக்கு கல்வி உதவியும் செய்து வருகிறார். அதன் தொடர்ச்சியாக, இந்த ஆண்டு பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற ஏழை மற்றும் விவசாயக் குடும்பங்களைச் சேர்ந்த 60 மாணவர்களை கல்லூரியில் சேர்க்க உதவி செய்துள்ளார்.
அதிக மதிப்பெண் பெற்று கல்லூரியில் சேர வசதியில்லாத மாணவர்களை, தன்னுடைய தேவி அறக்கட்டளை உறுப்பினர்கள் மூலம் கண்டறிந்து உதவி செய்துள்ளார். இதற்காக, தமிழகத்தில் உள்ள பல மாவட்டங்களில் இருந்து மாணவர்களை விஷால் குழுவினர் தேர்வு செய்துள்ளனர். அந்த மாணவர்கள் விருப்பப்படி மதிப்பெண்ணுக்கு தகுந்த பொறியியல், கலை அறிவியல் கல்லூரிகளில் படிப்புகளில் அவர்களை சேர்க்கவும் திட்டமிட்டு இருக்கிறார்.