திரையரங்குகளில் அரசு நிர்ணயம் செய்த கட்டணத்தைத்தான் வசூலிக்க வேண்டும் என தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் விஷால் வலியுறுத்தியுள்ளார்.
திரைத்துறைக்கு ஜிஎஸ்டியுடன் கூடுதலாக 10 சதவிகிதம் கேளிக்கை வரி விதிக்கப்பட்டதற்கு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், திரைப்பட விநியோகிஸ்தர்கள் சங்கம், திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் ஆகியவை எதிர்ப்பு தெரிவித்தன. கேளிக்கை வரியை ரத்து செய்யக் கோரி அக்டோபர் 6ம் தேதி முதல் புதிய திரைப்படங்களும் வெளியிடப்படவில்லை. கேளிக்கை வரியை ரத்து செய்யக் கோரி அரசிடம் திரைத்துறையினர் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இதனிடையே சினிமாவிற்கான கட்டணத்தை 25 சதவிகிதம் வரை உயர்த்த தமிழக அரசு அனுமதியளித்தது. ஆனால், இந்த கட்டண உயர்வு போதாது என திரையரங்கு உரிமையாளர்கள் போர்க்கொடி தூக்கினர்.
இப்படி திரைத்துறையில் பல்வேறு விவகாரங்கள் தலை தூக்கியுள்ள நிலையில், திரையரங்குகளில் அரசு நிர்ணயம் செய்த கட்டணத்தைத்தான் வசூலிக்க வேண்டும் என தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் விஷால் வலியுறுத்தியுள்ளார்.
திரையரங்குகளில் இருக்கும் உணவு கடைகளில், பொருட்களில் குறிப்பிடப்பட்டிருக்கும் விலையில் தான் அவற்றை விற்பனை செய்ய வேண்டும் என கூறியுள்ளார். திரையரங்குகளில் அம்மா தண்ணீர் பாட்டில் விற்பனை செய்ய வேண்டும் என்று கூறியுள்ள அவர், பொதுமக்கள் தண்ணீர் கொண்டுவர அனுமதிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். வாகன நிறுத்தக் கட்டணம் வசூலிக்கக் கூடாது என்றும் கேட்டுக்கொண்டுள்ளார். இதனை மீறி செயல்படும் திரையரங்குகள் குறித்து அரசிடம் உடனடியாக புகார் அளித்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் எச்சரித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் விரைவில் இணையதளம் மூலம் முன்பதிவு செய்வதற்கு வசூலிக்கப்படும் கூடுதல் கட்டணமும் ரத்து செய்யப்படும் என்று உறுதியளித்துள்ளார்.