”போலி ஆவணங்கள்மூலம் என்னை தயாரிப்பாளர் மிரட்டுகிறார்” - நடிகர் விமல் பரபரப்பு புகார்

”போலி ஆவணங்கள்மூலம் என்னை தயாரிப்பாளர் மிரட்டுகிறார்” - நடிகர் விமல் பரபரப்பு புகார்
”போலி ஆவணங்கள்மூலம் என்னை தயாரிப்பாளர் மிரட்டுகிறார்” - நடிகர் விமல் பரபரப்பு புகார்

தயாரிப்பாளர் சிங்காரவேலன் போலி ஆவணங்கள் மூலம் தன்னுடைய பட தயாரிப்பாளர்களை பணம் கேட்டு மிரட்டுவதாக நடிகர் விமல் சென்னை காவல் ஆணையரகத்தில் பரபரப்பு புகார் அளித்துள்ளார்.

நடிகர் விமல் 5 கோடி ரூபாய் பண மோசடி செய்ததாக தயாரிப்பாளர் கோபி என்பவர் நேற்று சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார். "மன்னர் வகையறா" படத்திற்காக பணம் வாங்கிக்கொண்டு திருப்பித்தராமல் மோசடி செய்ததாக அவர் குற்றம் சாட்டியிருந்தார். இந்த விவகாரம் தொடர்பாக கடந்த ஆண்டு விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் பொய் புகார் அளிக்கப்பட்டு வழக்குப்பதிவு செய்ய வைத்ததாகவும், தயாரிப்பாளர் கோபி தெரிவித்திருந்தார். வழக்குப்பதிவுக்குப் பிறகு பேச்சுவார்த்தையில் பணத்தை திருப்பித்தருவதாக ஒப்பந்தம் செய்துகொண்டதாகவும், ஆனால் உரிய நேரத்தில் பணத்தை செலுத்தாமல் மோசடி செய்வதாகவும் புகாரில் தெரிவித்திருந்தார்.

இந்த புகாருக்கு விளக்கமளிக்கும் வகையில் நடிகர் விமல் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் தயாரிப்பாளர் கோபி கொடுத்த புகாரை விசாரிக்கும் விசாரணை அதிகாரி முன்பு ஆஜராகி விளக்கம் அளித்தார். மேலும் தன்னை மோசடி செய்யும் சிங்காரவேலன் என்ற தயாரிப்பாளர் குறித்தும் புகார் அளித்துள்ளார். இதன்பின் செய்தியாளர்களிடம் நடிகர் விமல் கூறுகையில், "சிங்காரவேலன் என்ற தயாரிப்பாளர் தன் பெயர் மற்றும் ஆவணங்களைப் பயன்படுத்தி தயாரிப்பு நிறுவனம் ஒன்றை உருவாக்கி மோசடி செய்துள்ளார். "மன்னர் வகையறா" படத்திற்காக பணத்தை கடனாகப் பெற்று, படத்தை விற்பனை செய்துவரும் பணத்தையும் முறையாக கணக்கு காட்டாமல் சிங்காரவேலன் மற்றும் அவரது நண்பர்கள் மோசடி செய்துவிட்டனர்.

இது தொடர்பாக விருகம்பாக்கம் காவல்நிலையத்தில் உரிய ஆதாரங்களுடன் புகார் அளிக்கப்பட்டு வழக்குப்பதிவும் செய்யப்பட்டிருக்கிறது. இந்த விவகாரத்தைப் பொருத்தவரையில் சிங்காரவேலன், கோபி மற்றும் அவரது நண்பர்கள் என்னிடம் எந்தவித பண பரிவர்த்தனையும் வைத்துக் கொள்ளவில்லை என்பது தொடர்பான ஆவணங்களையும் காவல்துறையினரிடம் கொடுத்துள்ளேன்.

"மன்னர் வகையறா" பட விவகாரத்திற்கு பிறகு, கடந்த நான்கு வருடமாக சிங்காரவேலன் போலியான ஆவணங்களை வைத்து, தான் நடித்த பட தயாரிப்பாளர்கள் ஒவ்வொருவரையும் அணுகி மிரட்டியுள்ளார். நிம்மதியாக என்னை தூங்கவிடாமல் தயாரிப்பாளர் சிங்காரவேலன் மிரட்டி வருகிறார். படம் நடித்து வருவதால் இது தொடர்பாக வெளியில் தெரிவிக்காமல் தொடர்ந்து மிரட்டி வந்த சிங்காரவேலனுக்கு லட்சக்கணக்கில் பணத்தை கொடுத்து இழந்துள்ளேன். என்னிடம் கதை சொல்லவரும் நபர்களிடம் என் பெயரை சொல்லி லட்சக்கணக்கில் பணம் வாங்கி மோசடி செய்துள்ளார். பெங்களூரைச் சேர்ந்த நபர் ஒருவர் கதைசொல்ல வரும்போது ஐந்து லட்ச ரூபாய் கொடுத்து ஏமாந்ததாகக் கூறினார்.

இதனையறிந்து அந்தப் பணத்தை நான் கொடுத்தேன். என்மீது எந்தவித குற்றமும் இல்லாத காரணத்தினால் சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளலாம் என தற்போது காவல்துறையை நாடி உள்ளேன். என்னுடைய ஆவணங்களையும் கையெழுத்துகளையும் வைத்து தயாரிப்பு நிறுவனம் ஒன்று உருவாக்கப்பட்டது மட்டுமே எனக்குத் தெரியும். மற்றபடி தயாரிப்பாளர் சிங்காரவேலன் மற்றும் அவரது நண்பர்கள் பணம் கொடுக்கல் வாங்கல் விவகாரத்தில் என்னை தொடர்ந்து மோசடி செய்து வருகின்றனர். இறுதியாக நான் நடித்த ’விலங்கு’ என்ற வெப்சீரிஸ் தயாரிப்பாளரிடம் போலி ஆவணங்களை வைத்து சிங்காரவேலன் பணம் கேட்டு மிரட்டியதாக புதிய புகார் ஒன்றைத்தான் காவல் ஆணையரிடம் தற்போது கொடுத்துள்ளேன். யார் மோசடி செய்து உள்ளார்கள் என்பது குறித்து இரு தரப்பு புகாரைப் பெற்றுக்கொண்டு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்" என்று நடிகர் விமல் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com