“தாமதத்திற்கு மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்” வீடியோ வெளியிட்ட இயக்குநர்! வெளியானது வீர தீர சூரன்!
பண்ணையாரும் பத்மினியும், சித்தா படங்களின் இயக்குநரான எஸ். யூ. அருண்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள 'வீர தீர சூரன் - பார்ட் 2 ' திரைப்படத்தில் சீயான் விக்ரம், எஸ். ஜே. சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு , துஷாரா விஜயன், சித்திக் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜீ. வி. பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை ஜி. கே. பிரசன்னா மேற்கொள்ள, கலை இயக்கத்தை சி. எஸ். பாலச்சந்தர் கவனித்திருக்கிறார். ஆக்சன் திரில்லர் என்டர்டெய்னராக தயாராகும் இந்த திரைப்படத்தை ஹெச். ஆர். பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ரியா ஷிபு தயாரித்துள்ளார்.
காத்திருந்து ஏமாந்த ரசிகர்கள்..!
பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வீர தீர சூரன் திரைப்படம் இன்று தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் திரைப்படத்தை காண்பதற்கு ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் திரையரங்குகள் முன்பு பட்டாசுகள் வெடித்து மேளதாளங்கள் முழங்க காத்திருந்தனர்.
இதனிடையே, வீர தீர சூரன் படத்தை திரையிட டெல்லி உயர் நீதிமன்றம் 4 வாரம் தடை விதித்து இன்று காலை உத்தரவிட்டது. இதன் காரணமாக திரையரங்குகளில் இன்று காலையில் திரைப்படம் வெளியிடாமல் நிறுத்தப்பட்டது. இருப்பினும் பிரச்னைகள் அனைத்து தீர்க்கப்பட்டு மாலை முதல் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
மன்னிப்பு கேட்ட இயக்குநர் அருண்குமார்!
இதனிடையே, திரைப்படம் வெளியாவதில் ஏற்பட்ட தாமதத்திற்காக இயக்குநர் அருண்குமார் மன்னிப்பு கேட்டு வீடியோ ஒன்றினை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் பேசுகையில், “வீர தீர சூரன் மாலையில் இருந்து தியேட்டரில் திரையிடப்படுகிறது. எங்க அப்பா காலையில தியேட்டருக்கு போய்டு டிக்கெட் எடுப்பதற்காக நின்னு ஷோ கேன்சல் ஆனதும் திரும்பி வீட்டுக்கு போயிருக்கிறார். அதில் இருந்து விக்ரம் ரசிகர்களுக்கும் பொது மக்களுக்கும் எவ்வளவு இன்னல்களை இது உண்டாகியிருக்கும் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது.
உங்கள் அனைவரிடமும் படக்குழு சார்பாக நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். காலையில் இருந்து தியேட்டரில் ஆரவாரத்துடன் காத்திருந்த விக்ரம் ரசிகர்களுக்கும் இந்த பிரச்சனையில் உறுதிணையாக நின்ற தியேட்டர் ஓனர்கள், வினியோகஸ்தர்கள் மற்றும் எனது திரையுலக நண்பர்களுக்கும் மனமார்ந்த நன்றி” என்றார்.
என்னதான் பிரச்னை?
படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தாலும், ப்ரோமோஷனால எந்தக் குறையும் வைக்கக்கூடாது என்பதால், இந்தியா முழுக்கவே படத்துக்கான ப்ரோமோஷனில் ஈடுபட்டது ' வீர தீர சூரன்' படக்குழு. குறிப்பாக பல கல்லூரிகளுக்கு விசிட் அடித்தார்கள். இத்திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான `எச்.ஆர் பிக்சர்ஸ்' நிறுவனத்துக்கு பி4யூ நிறுவனம் பைனான்ஸ் செய்திருக்கிறது. அதில் தான் சிக்கல் வெடித்திருகிறது.
படத்தின் ஓ.டி.டி உரிமத்தை இந்த `பி4யூ' நிறுவனத்துக்கு தயாரிப்பு நிறுவனம் கொடுத்திருப்பதாகவும் கூறப்படுகிறது. ஓ.டி.டி உரிமம் விற்கப்படுவதற்கு முன்பே திரைப்படம் வெளியாவதால் படத்தின் ஓ.டி.டி உரிமத்தை விற்பதில் சிக்கல் எழுந்திருப்பதாகக் கூறி இந்த `பி4யூ' நிறுவனம் வழக்கு தொடர்ந்திருந்தது. இது குறித்த, வழக்கை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம் இன்று காலை 10.30 மணி வரை படத்தை வெளியிட இடைக்கால தடை விதித்திருந்தது. கிட்டத்தட்ட ஏழு கோடி ரூபாய் நிலுவை இருப்பதாக சொல்லப்பட்டது. தீர்வு எட்டப்படாததால் , அடுத்த நான்கு வாரங்களுக்கு படத்தை வெளியிட தடை என டெல்லி உயர்நீதிமன்றம் அறிவித்தது.
இந்த சூழலில், இன்று மதியம் மூன்று மணிக்குள் அனைத்து பிரச்னைகளும் தீர்க்கப்பட்டுவிடும் என்றும், படம் இன்று மாலை 6 மணிக்காட்சி முதல் வெளியாகும் என்றும் படக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதன்படி மாலை காட்சி முதல் படம் ரிலீஸ் ஆகி திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது.