கேரளாவில் ’கில்லி’ ரீ-ரிலீஸ்: தியேட்டரை தெறிக்கவிட்ட விஜய் ரசிகர்கள்
நடிகர் விஜய்யின் சூப்பர் ஹிட் அடித்த ‘கில்லி’ கேரளாவில் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2004 ஆம் ஆண்டு விஜய்-த்ரிஷா –பிரகாஷ் ராஜ் நடிப்பில் உருவான ‘கில்லி’ விஜய்யின் சினிமா வாழ்க்கையில் முக்கியமான படம். வசூல் சாதனை செய்த ‘கில்லி’ விஜய் ரசிகர்களாக அல்லாதவர்களுக்கூடப் பிடித்தது. தெலுங்கு ‘ஒக்கடு’ ரீமேக்கான கில்லியை விறுவிறு இயக்கத்தால் சூப்பர் ஹிட் ஆக்கினார் இயக்குநர் தரணி. இப்போதும், பலருக்கு ஃபேவரிட் படமாக கில்லியை சொல்கிறார்கள்.
இந்த நிலையில் ‘கில்லி’ கேரளாவில் நேற்று முதல் தியேட்டர்களில் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. கொரோனாவால் கடந்த ஆண்டிலிருந்து மூடப்பட்டிருந்த கேரள தியேட்டர்கள் கடந்த அக்டோபர் 25 ஆம் தேதிமுதல் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. இதனால், படங்கள் வெளியாகி வருகின்றன. தமிழகத்தை போலவே விஜய்க்கு கேரளாவிலும் ரசிகர்கள் அதிகளவில் இருப்பதால் கேரள தியேட்டர் உரிமையாளர்கள் ‘கில்லி’ படத்தை ரீ-ரிலீஸ் செய்துள்ளனர்.
இதனால், விஜய் ரசிகர்கள் உற்சாகமடைந்து நீண்ட வரிசையையில் சாலைகளில் விஜய் புகைப்படத்தை ஏந்திக்கொண்டு பைக்குகளிலும் கார்களிலும் தியேட்டர்களுக்குச் சென்று தெறிக்கவிட்டுள்ளனர். அதோடு, தியேட்டரில் குவிந்து ஆர்ப்பரித்து ‘கில்லி’ பார்த்துள்ளனர்.
இந்தப் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. ‘கில்லி’ படத்தின் இடைவேளையின்போது ‘பீஸ்ட்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் விஜய் தயாரிப்பாளர் கலாநிதிமாறனுடன் வரும் வீடியோவும் ஒளிபரப்பாக்கப்பட்டுள்ளது.