நடிகர் விஜய்சேதுபதியின் ‘சீதக்காதி’ கெட்அப் என்று சமூக வலைத்தளங்களில் ஒரு புகைப்படம் வேகமாக பரவி வருகிறது.
நடிகர் விஜய் சேதுபதி நடிக்கும் புதிய திரைப்படம் ‘சீதக்காதி’. இந்தப் படத்தில் நடிகர் விஜய்சேதுபதி வயதான தோற்றத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் விஜய் சேதுபதியின் புகைப்படம் என ஒரு புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது. அந்தப் புகைப்படம் உண்மையில் விஜய் சேதுபதியுடையதில்லை. அது நெல்லையை சேர்ந்த இலக்கியவாதி கிரிஷியின் புகைப்படம்.
இதுதொடர்பாக கிரிஷி புதிய தலைமுறைக்குப் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “ஷீட் அறக்கட்டளை சார்பில் சமீபத்தில் நடைபெற்ற மாநாட்டில் நான் பங்கேற்றிருந்தேன். அப்போது நானும், என் நண்பரும் நடந்து வரும் போது எடுக்கபட்ட புகைப்படம் அது. இந்தப் புகைப்படத்தின் சிறப்பு என்னவெனில், இந்தப் படம் ஒரு மனிதனின் நகர்தலை படம் பிடித்திருக்கிறது. ஒரு மனிதன் அமர்ந்த நிலையில் இருந்தாலோ, புத்தகம் படித்த நிலையில் இருந்தாலோ, இந்த அளவுக்கு ஈர்ப்பை ஏற்படுத்தி இருக்காது. அதுபோல் இந்தப் படம் கமல் மாதிரியோ, விஜயகாந்த் மாதிரியோ இருக்கிறார் என்று சொன்னால் கூட இந்த ஈர்ப்பு இருந்திருக்காது. விஜய்சேதுபதியை ஒப்பிட்டதுதான் இந்த அளவு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கு காரணம் சமீபத்தில் விஜய்சேதுபதி தயாரித்த ‘மேற்குத் தொடர்ச்சிமலை’ படத்தில் சமூகத்தின் மீதான அவருடைய பார்வை, மனிதாபிமானம் பற்றிய உயர்ந்த சித்திரத்தை மக்களிடம் ஏற்படுத்தியுள்ளது. பத்திரிகைகள் பெரும்பாலும் எதிர்மறை சிந்தனைகள் கொண்டதற்கு முக்கியத்துவம் கொடுக்கும். இந்தப் படத்தில் அதுபோல் ஏதுமில்லை. இந்தப் படம் லாபம் ஈட்டி தரும் படம் என்றால், அதுவும் இல்லை. அப்படியென்றால் படத்திற்கு பின்னால் இருக்கும் மறைபொருள் எது? சமூகரீதியாக யாதொரு பயனும் இல்லாத கலாச்சாரத்தின் காட்சி இது. ஆனால் இந்தப் படம் வெளியானதும் ஆயிரக்கணக்கான பின்னூட்டங்களை கொண்டு வந்ததுதான், இன்னும் மர்மமாக உள்ளது. வாழ்க்கையில் பல விஷயங்கள் புதிரானதுதான். இந்தப் புதிருக்கான விடையை தேடி மகிழ்வதை விட, மகிழ்வதுதான் சிறந்தது” என்று தெரிவித்தார். ஓய்வு பெற்ற ஆசிரியரான கிரிஷி, தற்போது இலக்கிய கூட்டங்களில் பங்கேற்று வருகிறார்.