பால் அபிஷேகம் செய்வதை ரசிகர்கள் தவிர்க்க வேண்டும் - நடிகர் விஜய்
பால் அபிஷேகம் செய்வதை ரசிகர்கள் தவிர்க்க வேண்டும் என ரசிகர் மன்றங்கள் மூலமாக நடிகர் விஜய் கேட்டுக்கொண்டுள்ளார்.
மெர்சல்’ படத்தைத் தொடர்ந்து விஜய் நடித்துள்ள படம் ‘சர்கார்’. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள இந்த திரைப்படம் தீபாவளி அன்று வெளியாக உள்ளது. இந்தப்படத்தில் விஜய் அரசியல்வாதியாக நடிக்கிறார். படத்தின் நாயகியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். வரலட்சுமி சரத்குமார், யோகி பாபு உட்பட பலர் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இந்தப் படத்துக்கு, கிரீஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
சர்காரின் பாடல் வெளியிடப்பட்டதில் இருந்து அத்திரைப்படம் சமூக வலைத்தளங்களிலும், செய்திகளிலும் பேசுபொருளானது. பாடல் வெளியீட்டில் பேசிய நடிகர் விஜய், ‘மெர்சல் திரைப்படத்தில் கொஞ்சம் அரசியல் இருந்தது. சர்காரில் அரசியல் மெர்சலாக உள்ளது’ என பல்வேறு அரசியல் பஞ்ச்களை பேசி கைதட்டல் வாங்கினார்.
பத்திரிகைக்கு பேட்டியளித்த இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இந்தப் படத்தில் விஜய்யின் கதாப்பாத்திரம் கொஞ்சம் வில்லத்தனம் கலந்ததாக இருக்கும் எனக் கூறியிருந்தார். அதற்கு ஏற்றார்போலவே டீசரில் அரசியல் வசனங்கள் பட்டையைக்கிளப்ப ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் வருண் என்பவர் ‘சர்கார்’படத்தின் கதையும், திரைக்கதையும் தன்னுடையது என்றும் 'செங்கோல்' என்ற தலைப்பில் அந்தக் கதையை தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தில் தான் பதிவு செய்துள்ளதாகவும் குறிப்பிட்டு வழக்கு தொடர்ந்தார். கே.பாக்யராஜ் தலையிட்டு கதை தொடர்பான பிரச்னையை முடிவுக்கு கொண்டு வந்தார்.
அதன்படி தீபாவளிக்கு வெளியாக சர்கார் திரைப்படம் தயாராக இருக்கிறது. வழக்கம் போல் விஜய் ரசிகர்கள் பேனர்கள், பால் அபிஷேகம் என கொண்டாட்டத்தை தொடங்கியுள்ளனர்.
இந்நிலையில் சர்கார் திரைப்படத்தின் முதல் நாள் கொண்டாட்டங்களில் ரசிகர்கள் பால் அபிஷேகம் செய்வதை தவிர்க்க வேண்டும் என ரசிகர் மன்றங்கள் மூலமாக நடிகர் விஜய் கேட்டுக்கொண்டுள்ளார். ஏற்கெனவே கொண்டாட்டங்கள் தொடங்கப்பட்டுவிட்ட நிலையில் விஜயின் வேண்டுகோளை ஏற்று ரசிகர்கள் நடந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.