தடை வருவதும் அதனை உடைப்பதும் விஜய்க்கு புதிதல்ல..! 

தடை வருவதும் அதனை உடைப்பதும் விஜய்க்கு புதிதல்ல..! 
தடை வருவதும் அதனை உடைப்பதும் விஜய்க்கு புதிதல்ல..! 

விஜய், நயன்தாரா, விவேக், கதிர், ஜாக்கி ஷெராப், டேனியல் பாலாஜி உட்பட பலர் நடித்துள்ள படம், ’பிகில்’. ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்தப் படம் தீபாவளிக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் முந்தைய படங்களை போலவே பிகிலும் நீதிமன்ற வழக்குக்குள் சிக்கி இருக்கிறது.

பிகில் படத்தின் கதை தன்னுடையது என்று இயக்குநர் பன்னீர்செல்வம் என்கிற செல்வா சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். பின்னர் இந்த வழக்கு காப்புரிமை தொடர்பானது என்பதால், உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரவுள்ளதால் வழக்கை வாபஸ் பெறுவதாக செல்வா தரப்பில் கூறப்பட்டது. இதனால் உரிமையியல் நீதிமன்றத்தில் இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார் செல்வா.  

சில தயாரிப்பு நிறுவனங்களிடம் கதைச் சொல்லி இருந்ததாகவும் அதைத் திருடி ‘பிகில்’ படம் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், அதனால் படத்திற்கு தடைவிதிக்க வேண்டும் என்றும் அவர் மனுவில் கூறியிருந்தார். இந்த மனு நீதிபதி சுரேஷ்குமார் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. ஏஜிஎஸ் நிறுவனம் மற்றும் இயக்குநர் அட்லி தரப்பில், வழக்கு தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்ய இன்று வரை அவகாசம் கேட்டதால் வழக்குத் ஒத்திவைக்கப்பட்டது. 

வரும் தீபாவளிக்கு படம் வெளியாகவுள்ள நிலையில் இந்த வழக்கு படத்தின் வெளியீட்டுக்கு தடையாகிவிடுமா..? என ரசிகர்கள் கவலையில் உள்ளனர். ஆனால் தன்னுடைய ஒவ்வொரு படத்திற்கும் சர்ச்சைகளை சந்திப்பதும், பட வெளியீட்டிற்கு முன்பு நீதிமன்ற வழக்குகளை கடந்து செல்வதும் நடிகர் விஜய்க்கும், அவரது இயக்குநர்களுக்கும் புதிதல்ல என்றும் கூறப்படுகிறது. 

2012-ம் ஆண்டு வெளியான ‘துப்பாக்கி’ திரைப்படத்தில் இஸ்லாமியர்களை தவறாக சித்தரித்ததாக சர்ச்சை எழுந்தது. 2013-ம் ஆண்டு வெளியான ‘தலைவா’ திரைப்படம் தன்னுடைய அப்பா, தாத்தாவின் வாழ்க்கைக் கதை என கண்ணன் என்பவர் நீதிமன்றத்தை நாடினார். அதேபோல் ‘தலைவா’ பட தலைப்பில் வந்த ‘time to lead’ என்ற வாசகமும் சர்ச்சையை கிளப்பியது.

2014-ம் ஆண்டு வெளியான ‘கத்தி’ திரைப்படத்தை இலங்கை அதிபராக இருந்த ராஜபக்சேவின் உறவினர் தயாரித்ததாக கூறி சர்ச்சை எழுந்தது. அந்தப்படதிற்கு எதிராக தமிழகத்தில் அரசியல் கட்சிகள் போராட்டம் நடத்தின. அதேபோல் கதைத்திருட்டு எனவும் வழக்குகள் தொடரப்பட்டன. 2017-ம் ஆண்டு வெளியான ‘மெர்சல்’ திரைப்படத்திற்கு அதன் தலைப்பு தொடர்பாக குற்றச்சாட்டு எழுந்தது. 2018-ம் ஆண்டு வெளியான ‘சர்கார்’ திரைப்படத்தில் வந்த காட்சிகள் தமிழக அரசின் திட்டங்களை கிண்டலடிப்பதாக கூறி சர்ச்சை எழுந்தது. இது தொடர்பாக இயக்குநர் முருகதாஸை கைது செய்யவும் போலீசார் முயற்சி செய்தனர். இந்நிலையில் தான் வரும் ‘பிகில்’ திரைப்படமும் நீதிமன்ற வழக்குக்குள் சிக்கியுள்ளது.

விஜய் திரைப்படம் என்றாலே டீசர், ட்ரைலர் போல நீதிமன்ற வழக்கு என்பதும் எழுதப்படாத விதியாகி விட்டதாக ரசிகர்கள் கவலை தெரிவிக்கின்றனர். ஆனால் எந்தப் பிரச்னைகள் வந்தாலும் அந்த தடைகளை தகர்த்து விஜய் வெற்றி பெற்றே வருகிறார் என்பதற்கு முந்தைய படங்களே சாட்சி என்றும் பிகில் அடிக்கின்றனர் அவரது ரசிகர்கள்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com