’நெல்சன்-சிவா-அனிருத்’ன் கலகலப்பூட்டும் ‘பீஸ்ட்’ முதல் பாடல் புரோமோ; விஜய் ரசிகர்கள் குஷி!
‘பீஸ்ட்’ படத்தின் முதல் பாடல் வரும் பிப்ரவரி 14 ஆம் தேதி வெளியாகிறது.
’மாஸ்டர்’ வெற்றிக்குப்பிறகு நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ‘பீஸ்ட்’ படத்தில் நடித்து முடித்துள்ளார் விஜய். பூஜா ஹெக்டே, செல்வராகவன், யோகி பாபு உள்ளிட்டோர் நடித்திருக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். ’பீஸ்ட்’ வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், படத்தின் முதல் பாடல் வரும் பிப்ரவரி 14 ஆம் தேதி காதலர் தினத்தன்று வெளியாகும் என்று படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் அறிவித்துள்ளது.
’அரபிக் குத்து’ என்று தொடங்கும் இப்பாடலை நடிகர் சிவகார்த்திகேயன் எழுதியுள்ளார். பாடல் அப்டேட்டுடன் நெல்சன், அனிருத், சிவகார்த்திகேயன் மூவரும் பேசும் வீடியோவுடன் விஜய் பேசும் ஆடியோவையும் இணைத்து வெளியிட்டுள்ளது படக்குழு.
நெல்சன் முதன்முதலாக இயக்குநராக அறிமுகமான ‘கோலமாவு கோகிலா’ படத்தின் சூப்பர் ஹிட் அடித்த ‘எனக்கு இப்போ கல்யாண வயசு வந்துடுச்சி’ பாடலை சிவகார்த்திகேயன் எழுதியிருந்தார். அதேபோல, ‘டாக்டர்’ படத்தின் வைரல் ஹிட் அடித்த ‘செல்லம்மா’ பாடலையும் சிவகார்த்திகேயன் எழுதியிருந்தார். இந்த இரண்டு பாடல்களுக்குமே நெல்சன், அனிருத், சிவகார்த்திகேயன் கூட்டணி புரோமோ வீடியோ வெளியிட்டு எதிர்பார்ப்பைக் கூட்டினார்கள். அந்த வரிசையில் தற்போது பீஸ்ட் படத்திற்கு அசத்தலான புரோமோ ஒன்றினை வெளியிட்டுள்ளார்கள். எதிர்பார்த்தப்படியே இரண்டுப் பாடல்களுமே வேற லெவல் ஹிட் அடித்தன. இந்த நிலையில், ‘பீஸ்ட்’ படத்தின் ‘அரபிக் குத்து’ வெளியாகும் நிலையில், இந்த மூவர் கூட்டணி தோன்றும் ப்ரோமோ வீடியோவை வெளியிட்டுள்ளனர்.
இந்த புரோமாவில் ’அரபிக் குத்து’ குறித்து அனிருத் சொல்ல அதனை நெல்சனும், சிவகார்த்திகேயனும் கலாய்ப்பது ரசிக்கும்படியாக உள்ளது. விஜய் ரசிகர்களுக்கு மிகப்பெரிய சர்ப்ரைஸ் இந்த புரோமோவில் உள்ளது. இறுதியில் நெல்சன் - சிவா - அனிருத் உடன் போனில் விஜய் உரையாடும் அந்த பகுதி உண்மையில் அவரது ரசிகர்களுக்கு விருந்துதான். இதுவே, பாடல் மீதான வரவேற்பை கூட்டியுள்ளது.
பிப்ரவரி 14 காதலர் தினத்தன்று வெளியாவதால் விஜய்க்கும் பூஜா ஹெக்டேவுக்குமான காதல் பாடலாக உருவாக்கப்பட்டிருக்கும் என்ற யூகங்களைக் கிளப்பியுள்ளது.