“இதை அசால்ட்டா எடுத்துக்காதீங்க; வெளியே வராதீங்க” - கண்கலங்கி கேட்டுக்கொண்ட நடிகர் வடிவேல்

“இதை அசால்ட்டா எடுத்துக்காதீங்க; வெளியே வராதீங்க” - கண்கலங்கி கேட்டுக்கொண்ட நடிகர் வடிவேல்
“இதை அசால்ட்டா எடுத்துக்காதீங்க; வெளியே வராதீங்க” - கண்கலங்கி கேட்டுக்கொண்ட நடிகர் வடிவேல்

தயவு பண்ணி அரசாங்கம் சொல்வதை கேட்டு இன்னும் கொஞ்ச நாளைக்கு வீட்டை விட்டு வெளியே வராதீங்க என்று நடிகர் வடிவேல் கேட்டுக்கொண்டுள்ளார்.

கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை நேற்று உலகம் முழுவதும் 22 ஆயிரமாக இருந்த நிலையில், இன்று 24 ஆயிரமாக அதிகரித்துள்ளது. அதாவது 24,065 பேர் இதுவரை உலகம் முழுவதும் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். உலகளவில் 199 நாடுகளுக்கு கொரோனா பரவிய நிலையில் பாதிப்பு எண்ணிக்கை 5,31,609ஆக உயர்ந்துள்ளது. உலகம் உழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 1,23,391 பேர் குணமடைந்துள்ளனர்.

கொரோனா உயிரிழப்பில் இத்தாலி முதலிடத்திலும் ஸ்பெயின் 2வது இடத்திலும், சீனா 3வது இடத்திலும், அமெரிக்கா 4வது இடத்திலும் உள்ளது. இத்தாலியில் 8,215, ஸ்பெயினில் 4,365, சீனாவில் 3,287, அமெரிக்காவில் 1,293 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். இந்தியாவை பொருத்தவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 16ஆக உள்ளது. பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 633 ஆக உள்ளது. சிகிச்சைப் பெற்று குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 44ஆக உள்ளது.

தமிழகத்தை பொருத்தவரை ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 29 ஆக அதிகரித்துள்ளது. இதனிடையே நாடு முழுவதும் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ள நிலையில் சமூக விலகலை கடைபிடிக்குமாறு மத்திய மாநில அரசுகள் வலியுறுத்தி வருகின்றன.

திரைத்துறை பிரபலங்களும் சமூக விலகல் குறித்தும் வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் என்பது குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் வீடியோ பதிவு செய்து அதை வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் நடிகர் வடிவேல் விழிப்புணர்வு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “தயவு பண்ணி அரசாங்கம் சொல்வதை கேட்டு இன்னும் கொஞ்ச நாளைக்கு வீட்டிலேயே இருங்கள். உலகம் முழுவதும் மருத்துவர்கள் தங்கள் உயிரை பணயம் வைத்து மக்களை காப்பாற்றி கொண்டு இருக்கிறார்கள். அவர்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். அதேபோல் அனைவரையும் பாதுகாக்க காவல்துறையே கையெடுத்து கும்பிட்டு கேட்கிறார்கள். யாருக்காக இல்லையோ, நம் சந்ததிகளுக்காக, நம் வம்சாவளிக்காக நம் புள்ளகுட்டி உசுர காப்பாத்துறதுக்காக நாம் எல்லோரும் வீட்டில் இருக்கணும். தயவு பண்ணி யாரும் வெளியே போகாதீங்க. இத அசால்ட்டா எடுத்துக்காதீங்க. ரொம்ப பயங்கரமா இருக்கு. தயவு பண்ணி வெளியே வராதீங்க. ப்ளீஸ்...” என கண் கலங்கி கேட்டுக்கொண்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com