நேரடியாக ஓடிடியில் வெளியாகும் டொவினோ தாமஸின் ‘மின்னல் முரளி’: அதிகாரபூர்வ அறிவிப்பு
டொவினோ தாமஸ் நடிக்கும் ‘மின்னல் முரளி’ படத்தின் வெளியீட்டுத் தேதியை அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது படக்குழு.
மலையாள முன்னணி நடிகர்களில் ஒருவரான டொவினோ தாமஸ் நடிப்பில் கடந்த மார்ச் மாதம் வெளியான ‘களை’ வித்தியாசமான கதையால் கவனம் ஈர்த்தது. அமேசான் பிரைமில் வெளியான இப்படம் தமிழிலும் கிடைக்கிறது. தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் கவனம் ஈர்த்தது. கடந்த வாரம் சோனி லைவ்வில் டொவினோ தாமஸின் ‘காணே காணே’ படமும் மலையாள ரசிகர்கள் மட்டுமல்லாமல் தமிழ் ரசிகர்களின் கவனம் ஈர்த்து பாராட்டுக்களைக் குவித்து வருகிறது.
இந்த நிலையில், டொவினோ தாமஸ் நடிப்பில் உருவாகியுள்ள ‘மின்னல் முரளி’ படத்தின் வெளியீட்டுத் தேதியை அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது படக்குழு. குரு சோமசுந்தரம், ஹரிஶ்ரீ அசோகன் மற்றும் அஜு வர்கீஸ் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். மலையாளம் மொழியில் உருவாகியுள்ள இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, ஆங்கிலம் மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியாகிறது.
ஜெய்சன் எனும், ஒரு சாதாரண மனிதனாக இருந்து மின்னல் தாக்கியதால் சூப்பர் ஹீரோ முரளியாக மாறிய, அற்புத சக்திகள் கிடைக்கப் பெற்றவனின் கதையை சொல்கிறது. இப்படத்தை ஃபாசில் ஜோசப் இயக்கி இருக்கிறார். இந்த நிலையில், கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி ‘மின்னல் முரளி’ வரும் டிசம்பர் 24 ஆம் தேதி நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது என்பதை அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது படக்குழு.