நடிகர் சுஷாந்த் சிங் மரணம்.. இறுதி அறிக்கையை தாக்கல் செய்த CBI.. வெளியான தகவல்!
பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத். இவர், கடந்த 2020ஆம் ஆண்டு ஜூன் 14ஆம் தேதி, மும்பையின் பாந்த்ராவில் உள்ள தன் அடுக்குமாடி குடியிருப்பில் இறந்து கிடந்தார். பிரேதப் பரிசோதனையில், இது தற்கொலை என கூறப்பட்டாலும் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக சுஷாந்தின் தந்தை தெரிவித்திருந்தார். இதுதொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தியது. இவரது மரணம் தொடர்பாக 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்தன. இதில் ஒரு வழக்கு, கடந்த ஆகஸ்ட் 2021ஆம் ஆண்டு பாட்னாவில் சுஷாந்த் சிங்கின் தந்தை ரியா, அவரது உறவினர்கள் மற்றும் பிறருக்கு எதிராகவும், மற்றொன்று செப்டம்பர் மாதம் ரியாவால் ராஜ்புத்தின் சகோதரி மற்றும் மருத்துவர் மீதும் தாக்கல் செய்யப்பட்டது.
இவ்விரண்டு வழக்குகளையும் சிபிஐயே விசாரித்து வந்தது. இந்த நிலையில், அவரது மரணம் தொடர்பாக சிபிஐ இறுதி அறிக்கை தாக்கல் செய்துள்ளது. தற்கொலைதான் காரணம் என்று கூறி வழக்கை முடித்துக் கொள்வதாக சிபிஐ நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது. அந்த அறிக்கையில், ’நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணம் தொடர்பாக சமூக வலைதளங்களில் வெளியான தகவல்கள் தவறானவை என்றும் மன அழுத்தம் காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம்’ என விளக்கம் அளித்துள்ளது.