இயக்குனர் செல்வராகவனிடம் கோரிக்கை வைத்த சூர்யா!
செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படம், ‘என்ஜிகே’ (நந்த கோபால குமரன்). சூர்யா ஜோடியாக சாய் பல்லவி, நடிக்கிறார். மேலும், ரகுல் ப்ரீத்சிங், ஜெகபதி பாபு, மன்சூர்அலிகான், வேல ராமமூர்த்தி உட்பட பலர் நடிக்கின்றனர். யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். சிவகுமார் விஜயன் ஒளிப்பதிவு செய்கிறார். டிரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தின் டிரைலர் மற்றும் பாடல் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. நடிகர் சிவக்குமார் படக்குழுவினரை வாழ்த்தினார்.
இதில், நடிகர் சூர்யா பேசும்போது, ’’ இந்த படத்தில் பணியாற்றிய போது, ஒவ்வொரு நாளும் புது படத்திற்கு செல்வதுபோல இருந்தது. நேற்று நடந்த படப்பிடிப்பின் தொடர்ச்சி இருக்காது. நேரம் ஆனாலும் பணியாற்றிக் கொண்டிருப்பார் செல்வராகவன். இயக்கத்திலும் சரி, டப்பிங்கிலும் சரி, நுணுக்கமாகப் பார்த்து பார்த்து செல்வார் அவர். அவர் இயக்கத்திலும், எழுத்திலும் எனக்கு தீராத காதல் உண்டு. செல்வாவின் இயக்கத்தில் ஆத்மார்த்தமாக நடித்திருக்கிறேன்.
யுவனின் இசையைப் பார்க்கும் போது எனக்கு ஆச்சரியமாக இருக்கும். அவர் இசை, காலத்தைக் கடந்து நிற்கும் என்பதில் ஐயமில்லை. செல்வராகவன் மற்றும் யுவன் கூட்டணி கணவன் மனைவி போல இருக்கும். சாய்பல்லவி ஒவ்வொரு காட்சி முடிந்தபிறகும் நான் நன்றாக நடித்திருக்கிறேனா? என்று கேட்டு அர்ப்பணிப்புடன் நடித்தார். இதில் நடித்த மற்ற நடிகர், நடிகைகளும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். இப்படம் முக்கியமான படமாக இருக்கும். இப்படத்தின் டப்பிங் பேசி முடித்துவிட்டேன். செல்வராகவனுக்கு ஒரு கோரிக்கை, அடுத்த படம் எடுக்கும்போது என்னை வைத்து
எடுங்கள்’’ என்றார்.
இயக்குநர் செல்வராகவன் பேசும்போது, ‘’இந்த கதையின் கேரக்டரை வடிவமைக்கும் போதே சூர்யா தான் பொருத்தமாக இருப்பார் என்று தோன்றியது. அவர் இயக்குநரின் நடிகர். அவர் எனக்கு கிடைத்தது வரம். சாய்பல்லவி குழந்தைபோல சொல்வதைக் கேட்டு நன்றாக நடித்திருக்கிறார். ரகுல் ப்ரீத் சிங் கதாபாத்திரத்தைப் புரிந்துகொண்டு நடிக்கும் திறமையான
நடிகை’’ என்றார்.
ஹீரோயின் சாய் பல்லவி பேசும்போது, ‘’இதன் ஷூட்டிங் முடிந்ததும் பள்ளி மாணவி போல உணர்ந்தேன். நான் எப்போதும் படப்பிடிப்பிற்கு செல்வதற்கு முன்பே என்னைத் தயார்படுத்திக் கொண்டு செல்வேன். ஆனால் இந்தப்படத்தில் நான் தயார்படுத்திக் கொள்வது தேவையில் லை என்று உணர்ந்தேன். செல்வராகவன் மூலம் நான் நிறைய கற்றுக் கொண்டேன். ஒவ்வொரு நடிகர்களுக்குள் இருக்கும் திறமையை வெளிகொண்டு வருவதில் அவர் வல்லவர்’’ என்றார்.