’சிறுத்தை’ சிவாவுடன் அடுத்தப் படத்தில் இணையும் சூர்யா?
நடிகர் சூர்யா அடுத்ததாக ‘சிறுத்தை’ சிவா இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா தற்போது ’சூர்யா 40’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின், இறுதிக்கட்டப் படப்பிடிப்பு தற்போது குற்றாலம் மற்றும் தென்காசி பகுதிகளில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், அடுத்தப் படமாக இயக்குநர் ‘சிறுத்தை’ சிவா இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார் என்று தகவல் வெளியாகி இருக்கிறது. சிவா தற்போது ரஜினியின் ‘அண்ணாத்த’ படத்தை இயக்கி முடித்திருக்கிறார். வரும் நவம்பர் 4 ஆம் தேதி தீபாவளியையொட்டி ‘அண்ணாத்த’ வெளியாகிறது.

இந்த நிலையில், நடிகர் சூர்யா சிவா இயக்கத்தில் ’எதற்கும் துணிந்தவன்’படப்பிடிப்பு நிறைவடைந்தபிறகு நடிக்கவிருக்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது. அதோடு, இப்படத்தின் முன் தயாரிப்பு பணிகளில் சிவா மும்மரமாக ஈடுபட்டு வருகிறார் என்றும் சொல்லப்படுகிறது. விரைவில் இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று சொல்லப்படுகிறது. சூர்யா - வெற்றிமாறன் கூட்டணியில் உருவாவதாக இருந்த ‘வாடிவாசல்’ படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடங்கவிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.