துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த ரசிகைக்கு மனமுடைந்து அஞ்சலி செலுத்திய நடிகர் சூர்யா!

அமெரிக்காவில் சமீபத்தில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில், உயிரிழந்த தன்னுடைய ரசிகை ஐஸ்வர்யா மறைவுக்கு அறிக்கை வெளியிட்டு, அஞ்சலி செலுத்தியுள்ளார் நடிகர் சூர்யா.
Aishwarya - Actor Suriya
Aishwarya - Actor SuriyaFile images

அமெரிக்காவின் டெக்சாஸ் நகர் ஆலன் பகுதியில் அமைந்துள்ள வணிக வளாகம் ஒன்றில், கடந்த மே 6ஆம் தேதி இரவு திடீரென நுழைந்த மர்ம நபர் ஒருவர், துப்பாக்கியால் சுட்டதில் 8 பேர் பலியாகினர். மேலும் 7 பேர் படுகாயமடைந்தனர். இறுதியில் அந்த மர்ம நபரை, போலீசார் சுட்டுக் கொன்றனர். இந்த துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த 8 பேரில், தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தைச் சேர்ந்த ரங்கா ரெட்டி மாவட்டத்தின் கூடுதல் மாவட்ட நீதிபதியான தட்டிகொண்டா நர்சிரெட்டியின் மகள் ஐஸ்வர்யாவும் ஒருவர்.

gun
gun

இவர் டெக்சாஸில் உள்ள ஒரு நிறுவனத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக பொறியாளராக பணியாற்றி வந்துள்ளார். மெக்கின்னியில் வசித்து வந்த அவர், தனது நண்பருடன் ஷாப்பிங் செய்து கொண்டிருந்தபோது, இந்த கொடூரமான துப்பாக்கிச் சூட்டுக்கு இரையானார். இவர், நடிகர் சூர்யாவின் ரசிகை என்று சொல்லப்படுகிறது.

இந்த நிலையில் இச்சம்பவம் குறித்து அறிந்த நடிகர் சூர்யா, ஐஸ்வர்யாவின் மறைவுக்கு அறிக்கை வெளியிட்டு, அஞ்சலி செலுத்தியுள்ளார். ஐஸ்வர்யாவின் குடும்பத்தினரை குறிப்பிட்டு சூர்யா வெளியிட்டுள்ள அறிக்கையில், ”உங்களுக்கும் உங்களின் குடும்பத்திற்கும், எனது அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன். இது ஒரு ஈடு செய்ய முடியாத இழப்பு. இந்த சம்பவம் உண்மையில் எனக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் உங்களின் மகளான ஐஸ்வர்யாவை இழந்தது துரதிர்ஷ்டவசமானது.

நடிகர் சூர்யா அறிக்கை
நடிகர் சூர்யா அறிக்கை

ஒரு சக மனிதராக மட்டுமின்றி, ஒரு தந்தையாகவும் உங்கள் துயரத்தில் நான் பங்கெடுத்துக் கொள்கிறேன். உங்களின் மகளை, நினைவுகூரும் போதெல்லாம்... என்னுடைய கைகளைப் பிடித்துக் கொள்ளுங்கள். உங்கள் மகள் வானத்தில் பிரகாசிக்கும் நட்சத்திரமாக இருந்து நம் அனைவரையும் பார்த்துக் கொண்டிருக்கிறாள் என்று நம்புகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் ஐஸ்வர்யா குறித்து, "நீங்கள் என்மீது வைத்திருந்த நேசம் என்றென்றும் என் நினைவில் இருக்கும். என்னை உங்களின் ஒரு பகுதியாக ஆக்கிய நீங்கள் இவ்வளவு சீக்கிரம் சென்றிருக்கக் கூடாது. உங்களுக்கும், உங்களுடைய குடும்பத்திற்கும் எனது இதயபூர்வமான இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறேன்” என அதில் கூறியுள்ளார்.

இந்த அறிக்கையுடன், நடிகர் சூர்யா ஐஸ்வர்யாவின் புகைப்படத்திற்கு பக்கத்தில் பூங்கொத்து வைத்து அஞ்சலி செலுத்திய புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com