குணசித்திர நடிகர் சூப்பர் குட் சுப்பிரமணி உடல்நலக் குறைவால் மரணம்!
நடிகர் சூப்பர் குட் சுப்பிரமணி பல்வேறு படங்களில் குணச்சித்திர வேடங்கள் மற்றும் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து கவனம் பெற்றவர். 58 வயதாகும் இவருக்கு மனைவி மற்றும் பதினொன்றாம் வகுப்பு படிக்கும் மகளும், ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மகனும் இருக்கிறார்கள். இவர் இயக்குநர்கள் சரவண சுப்பையா மற்றும் பவித்ரன் ஆகியோரிடம் உதவி இயக்குனராகப் பணியாற்றியுள்ளார்.
திரைப்பயணம்
இயக்குநராகும் கனவு நிறைவேறாததால், நடிப்பில் கவனம் செலுத்தி குணச்சித்திர வேடங்களில் நடித்து பிரபலமானார் சுப்பிரமணி. குணச்சித்திர கதாபாத்திரம், முக்கிய வேடங்களில் இவர் பல திரைப்படங்கள் நடித்திருந்தாலும் இவர் நடித்த முண்டாசுப்பட்டி திரைப்படம், இவருக்கு ஒரு நல்ல வரவேற்பினை தமிழ் சினிமாவில் பெற்று தந்துள்ளது. இவர் பரியேறும் பெருமாள், பிசாசு, ஜெய் பீம், கூர்கா, ரஜினி முருகன் உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில் சமீபத்தில் "கமாண்டோவின் லவ் ஸ்டோரி" என்ற படத்திற்கு தானாக முன்வந்து டப்பிங் பேசி கொடுத்தார்.
புற்றுநோயுடன் போராட்டம்
இந்த நிலையில், அவருக்கு புற்றுநோய் இருப்பது தெரியவந்துள்ளது. இதன்பின் அவரை சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். தொடர்ந்து சிகிச்சை பெற்றுவந்த நடிகர் சுப்பிரமணிக்கு புற்றுநோய் பாதிப்பில் 4வது கட்டம் என மருத்துவர்கள் தெரிவித்ததை அடுத்து கடுமையான நிதி நெருக்கடியும் ஏற்பட்டுள்ளது.
இதனைத்தொடர்ந்து அவரின் சிகிச்சைக்காகவும், குடும்பத்தின் செலவுக்காகவும் நடிகர், நடிகைகள், திரைப்பட சங்கங்கள் மற்றும் நண்பர்கள் உதவி வந்தனர். புற்றுநோய் அவரின் மூளை உட்பட உடல் முழுவதும் பரவியதால் அவரை காப்பாற்ற முடியாமல் போகவே இன்று அவர் உயிரிழந்தார்.
தற்போது சூப்பர் குட் சுப்பிரமணியின் உடல் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் இருக்கிறது. இன்று இரவு மேற்கு மாம்பலத்தில் இருக்கும் அவரது இல்லத்திற்கு உடல் கொண்டுவரப்படும். நாளை அவரது இறுதிச் சடங்கு சென்னையில் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளாது.