தீர்ந்தது பிரச்னை: மனைவியுடன் சேர்கிறார் சுதீப்?
’நான் ஈ’ படத்தில் வில்லனாக நடித்தவர் கன்னட நடிகர் சுதீப். இவர் பிரியா என்பவரை காதலித்து 2001-ல் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். இந்நிலையில் இரண்டு பேருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. பிரியா மகளோடு தனியாக வசித்து வந்தார். இதையடுத்து இருவரும் விவாகரத்து செய்ய முடிவு செய்தனர். பெங்களூர் குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.
இந்நிலையில் இந்த வழக்கு விசாரணை பெங்களூர் குடும்ப நல நீதிமன்றத்தில் புதன்கிழமை வந்தது. படப்பிடிப்புக்காக சுதீப், பாங்காக் சென்றுள்ளதால் அவர் ஆஜராகவில்லை. பிரியாவும் ஆஜராகவில்லை. கடந்த ஒன்பது முறை நடந்த விசாரணைகளுக்கு தொடர்ந்து இருவரும் ஆஜராகவில்லை.
இந்நிலையில் இருவரும் பிரச்னையை பேசி தீர்த்துக்கொண்டனர் என்றும் இதன் காரணமாக விவாகரத்து முடிவை திரும்ப பெற இருப்பதாகவும் அதன் காரணமாகவே இருவரும் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை என்று அவர்களுக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்துள்ளனர்.