கன்னட பட ஷூட்டிங்கில் விபத்து: நடிகர் சுதீப் காயம்!
கன்னட பட ஷூட்டிங்கின் போது நடந்த விபத்தில் நடிகர் சுதீப், முதுகில் படுகாயமடைந்தார்.
தமிழில், ’நான் ஈ’, ’ரத்த சரித்திரம்’, ’புலி’, ’முடிஞ்ச இவனப்புடி’ படங்களில் நடித்தவர் கன்னட ஹீரோ சுதீப். இவர் பிரபுதேவா இயக்கத்தில் சல்மான் கான் நடிக்கும் ’தபாங் 3’ என்ற இந்திப் படத்தில் நடித்துவந்தார். இதில் அவர் நடிக்கும் காட்சிகளின் படப்பிடிப்புகள் முடிந்துவிட்டது. இதையடுத்து ’கோட்டிகோபா 3’ என்ற கன்னட படத்தில் நடித்துவருகிறார்.
இந்தப் படத்தின் ஷூட்டிங், ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் திரைப்பட நகரில் கடந்த 10 நாட்களாக நடந்து வந்தது. சண்டைக் காட்சி படப்பிடிப்பின்போது நடிகர் சுதீப்பின் முதுகில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து அங்குள்ள மருத்துவமனை ஒன்றில் அவர் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அவர் சில வாரங்கள் ஓய்வெடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் கூறியதை அடுத்து, வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார்.