சினிமா
கொரோனா பேரிடர்: முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.10 லட்சம் வழங்கிய நடிகர் சூரி
கொரோனா பேரிடர்: முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.10 லட்சம் வழங்கிய நடிகர் சூரி
நடிகர் சூரி முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு 10 லட்சம் ரூபாய் வழங்கியுள்ளார்.
கொரோனா பெருந்தொற்று தடுப்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நன்கொடை வழங்குமாறு பொதுமக்கள், சமூகநல அமைப்புகள், தொழில் நிறுவனங்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இதனை ஏற்று முதல்வர் நிவாரண நிதிக்கு பொதுமக்கள், அரசியல் கட்சிகள், அரசியல் தலைவர்கள், தொழில் நிறுவனங்கள், சினிமா பிரபலங்கள் என பல தரப்பினரும் நன்கொடை வழங்கி வருகின்றனர். இந்நிலையில், முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு நகைச்சுவை நடிகர் சூரி 10 லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கியுள்ளார். இந்த தொகையை நடிகர் சூரி, சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி எம்.எல்.ஏ.வும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலினிடம் வழங்கினார்.
இதுகுறித்து உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், “நடிகர் அண்ணன் சூரி அவர்கள் ரூ.10 லட்சத்துக்கான காசோலையையும், தன் மகள் வெண்ணிலா - மகன் சர்வான் சார்பில் ரூ.25 ஆயிரத்துக்கான ரொக்கத்தையும் கொரோனா தடுப்பு பணிக்காக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு இன்று என்னிடம் வழங்கினார். சூரி அண்ணன் அவர்களுக்கு என் அன்பும் நன்றியும்” என்று பதிவிட்டுள்ளார்.