நேரடியாக ஓடிடியில் வெளியாகும் சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’?
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘டாக்டர்’ படம் ஓடிடியில் வெளியாகவுள்ளது.
நடிகர் சிவகார்த்திகேயன் – பிரியங்கா அருள்மோகன் நடிப்பில் உருவாகியுள்ள ‘டாக்டர்’ படத்தை ’கோலமாவு கோகிலா’ பட இயக்குநர் நெல்சன் இயக்கியுள்ளார். விஜய்யின் ‘பீஸ்ட்’ படத்தினையும் நெல்சன் இயக்கியிருப்பதால், டாக்டர் படத்திற்கு சிவகார்த்திகேயன் ரசிகர்களோடு விஜய் ரசிகர்களும் ஏகப்பட்ட எதிர்பார்பார்ப்புகளோடு காத்திருக்கிறார்கள்.
‘டாக்டர்’ படம் கடந்த மார்ச் 26-ஆம் தேதி வெளியாவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது, தமிழக சட்டமன்றத் தேர்தலால் அம்முடிவு மாற்றப்பட்டு ரம்ஜான் பண்டிகை அன்று மே 14 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், அன்றும் வெளியாகவில்லை. இப்படி தேதிகள் தள்ளிக்கொண்டே சென்ற நிலையில்,தற்போது கொரோனா பாதிப்பு குறைந்துள்ளதால் படத்தை வெளியிட முடிவு செய்துள்ளது படக்குழு. தியேட்டர்கள் திறக்கப்படாத நிலை உள்ளதால், படத்தை ஓடிடியில் வெளியிட உள்ளது படக்குழு. டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டாரில் நேரடியாக வெளியாகவுள்ளதாக உறுதியாக சொல்லப்படுகிறது. விரைவில் இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது.