ஃபெஞ்சல் புயல் நிவாரணம்.. எடுத்துக்காட்டாக ஓடி வந்து நிதியுதவி வழங்கினார் சிவகார்த்திகேயன்!
வங்கக்கடலில் கடந்த 29-ம் தேதி உருவான ஃபெஞ்சல் புயலானது கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை உள்ளிட்ட தமிழகத்தின் வட மாவட்டங்களை சின்னாபின்னமாக்கிவிட்டு சென்றுள்ளது. யாரும் எதிர்ப்பார்க்காத வகையில் திசைமாறிய புயலானது திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி முதலிய மாவட்டங்களை எப்போதும் இல்லாதவகையில் தீவர பாதிப்பிற்குள் தள்ளியுள்ளது. ஏராளமான மக்கள் தங்கள் இருப்பிடங்களை இழந்து சாப்பாட்டிற்கு வழியில்லாமல் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனனர். பல உயிரிழப்புகளும் மோசமான வகையில் நடந்தேறியுள்ளன.
இந்நிலையில், ஃபெஞ்சல் புயலால் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை சரிசெய்ய உடனடியாக ரூ.2000 கோடி நிவாரண தொகையை ஒதுக்க வேண்டும் என்ற கோரிக்கையை மத்திய அரசிடம் தமிழக முதலமைச்சர் வைத்துள்ளார். அதை பல அரசியல் தலைவர்கள் வழிமொழிந்து, “உடனடியாக நிவாரண நிதியை ஒதுக்க வேண்டும்” என கோரிக்கை வைத்து வருகின்றனர்.
இதற்கிடையில் நடிகர் சிவகார்த்திகேயன் ஃபெஞ்சல் புயல் பாதிப்பு மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.10 லட்சம் வழங்கியுள்ளார்.
நிவாரண பணிக்கு 10 லட்சம் வழங்கிய சிவகார்த்திகேயன்..
துணை முதலமைச்சரான உதயநிதி ஸ்டாலினிடம் புயல் பாதிப்புக்கான நிவாரணத் தொகை காசோலையை நேரில் சென்று ஒப்படைத்துள்ளார் சிவகார்த்திகேயன்.
இதுகுறித்து தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டிருக்கும் உதயநிதி ஸ்டாலின், “ஃபெஞ்சல் புயல் - கனமழையைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வரும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்குத் துணை நிற்கும் விதமாக, ‘முதலமைச்சரின் பொது நிவாரண நிதி’-க்கு திரைப்பட நடிகர் சகோதரர் சிவகார்த்திகேயன் ரூ.10 லட்சத்துக்கான காசோலையை இன்று நம்மிடம் வழங்கினார். அவருக்கு என் அன்பும், நன்றியும்” என பதிவிட்டுள்ளார்.