''திருமணம் குறித்து உரிய நேரத்தில் நானே தெரிவிப்பேன்'' - நடிகர் சிம்பு!
திருமணம் குறித்து உரிய நேரத்தில் தானே அறிவிப்பு வெளியிடவுள்ளதாக நடிகர் சிம்பு தெரிவித்துள்ளார்.
நடிகரும், இயக்குநருமான டி.ராஜேந்தரின் இளைய மகன் குறளரசனின் திருமணம் சமீபத்தில் நடந்து முடிந்தது. அவரது திருமணம் முடிந்ததில் இருந்தே நடிகர் சிம்புவின் திருமணம் குறித்தும் அதிகம் சமூகவலைதளங்களில் பேசப்பட்டு வருகிறது. குறிப்பாக, சிம்புவின் தாய் பார்த்துள்ள உறவுக்கார பெண்ணை அவர் திருமணம் செய்து கொள்ளவுள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது.
ஆனால், தனக்கு தற்போது திருமணம் குறித்து எந்த திட்டமும் இல்லை என சிம்பு விளக்கமளித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''எனது திருமணம் குறித்து சில செய்திகள் பரவுகின்றன. அதை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன். எனக்கு தற்போது திருமணம் குறித்து எந்த திட்டமும் இல்லை. திருமணம் குறித்து உரிய நேரத்தில் நானே தெரிவிப்பேன்.
சில படங்களுடன் என்னை தொடர்புப்படுத்தியும் செய்திகள் பரவுகின்றன. ஒரு நடிகராக பல சந்தர்ப்பங்களில் நான் பல தயாரிப்பாளர்களை சாதாரணமாக சந்திக்கிறேன். அதற்காக நான் அவர்களை படவாய்ப்புக்காக சந்தித்தேன் என்பது அர்த்தமல்ல. இந்த சந்திப்புகளை வைத்து என் எதிர்கால படங்கள் என வதந்தி பரவுகிறது. அதை நம்பும் என் ரசிகர்கள் அது இல்லை என தெரியும் போது அதிருப்தியும் ஏமாற்றமும் அடைகிறார்கள். நான் நடிக்க ஒப்பந்தமாகும் படங்கள் குறித்து சம்பந்தப்பட்ட தயாரிப்பு நிறுவனம் முறையாக அறிவிக்கும்'' என்றும் அவர் தெரிவித்துள்ளார்.