’இன்டர்வியூ கொடுங்க டிரம்ப்’: அக்ஷய் குமாரை கலாய்த்த நடிகர் சித்தார்த்!
இந்தி நடிகர் அக்ஷய்குமாரை கலாய்த்து நடிகர் சித்தார்த் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரபல இந்தி நடிகர் அக்ஷய்குமார். இவர் தமிழில், ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்த ’2.ஓ’ படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். இவர், பிரதமர் நரேந்திர மோடியை சமீபத்தில் பேட்டி எடுத்தார். மக்களவைத் தேர்தலில் இவர் வாக்களிக்கவில்லை. இதையடுத்து இவர் கனடா நாட்டைச் சேர்ந்தவர் என்றும் இரட்டை குடியுரிமை கொண்டவர் என்றும் சமூக வலைத்தளங்களில் சர்ச்சை எழுந்தன. இந்நிலையில் அக்ஷய் குமார் தனது விளக்கத்தை அளித்தார்.
அதில், ’’கனடா நாட்டு பாஸ்போர்ட் வைத்திருப்பதை எப்போதும் நான் மறைத்ததும் மறுத்ததும் இல்லை. எனது குடியுரிமை பற்றி தேவையில் லாத சர்ச்சைக்குள் என்னை இழுத்துவிட்டிருப்பது ஏமாற்றத்தை தந்திருக்கிறது’’ என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் அக்ஷய்குமாரை கிண்டலடித்து, நடிகர் சித்தார்த் ட்விட் செய்துள்ளார். அதில், ‘ஹாய், டொனால்ட் ட்ரம்ப், நீங்கள் தேர்தலுக்கு மீண்டும் தயாராகி வருவதால் எனக்கு நீங்கள் ஒரு பேட்டி கொடுக்க பரிந்துரைக்கிறேன். உங்களிடம் கேட்க என்னிடம் முக்கியமான கேள்விகள் இருக்கின்றன. நீங்கள் பழங்களை எப்படிச் சாப்பிடுவீர்கள், எப்படி தூங்குவீர்கள், உங்கள் வேலை பழக்கவழக்கம் மற்றும் உங்கள் அழகின் ரகசியம் என்பது பற்றி பேசலாம். என்னிடம் இந்திய பாஸ்போர்ட் இருக்கிறது’ என்று பதிவிட்டுள்ளார்.

