“கில்லிக்குப் பிறகு விஜய்க்கு தீவிர ரசிகனாக மாறினேன்” - ஷாந்தணு
‘மாஸ்டர்’ பட இசை வெளியீட்டு விழாவில் நடிகர் ஷாந்தணு அப்படத்தில் நடித்த அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார்.
விஜய் ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்த‘மாஸ்டர்’ படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்று வருகிறது. அதுவும் ரஜினிகாந்த் பத்திரிகையாளர்களை சந்தித்த அதே தனியார் நட்சத்திர விடுதியில்தான் இசை வெளியீட்டு விழா நடைபெற்று வருகிறது. இந்த விழாவிற்கு விஜய் கோட் சூட் உடையில் வருகை தந்தார். ஒரே வரிசையில் மாளவிகா மோகனன், இயக்குநர் லோகேஷ் கனகராஜ், விஜய்க்கு ஆகிய மூவருக்கும் இருக்கைகள் ஒதுக்கப்பட்டிருந்தது.
விழாவிற்கு வந்த விஜயின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் மற்றும் அவரது தாய் ஷோபாவை மேடைக்கு அழைத்தனர். அப்போது சந்திரசேகரை சில வார்த்தைகள் பேச சொன்ன போது அவர் ‘என்னால் பேச முடியவில்லை. அதிக மகிழ்ச்சியில் இருக்கும் போது வார்த்தைகள் வராது என்பார்கள். அது இப்போது நடந்துள்ளது’ என்றார். மேலும் அவரது தாய் ஷோபாவை ஒரு பாடலை பாட சொன்னார்கள் அவர் மறுத்துவிட்டார். விஜய் மாஸ்டர் படத்தில் ஆங்கிலத்தில் பாடியுள்ள பாடல் தனக்குப் பிடித்துள்ளதாக கூறினார்.
ஒரு தாயாக நீங்கள் இந்த மேடையில் விஜயிடம் கேட்க விரும்புவது என்ன என்று கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்கு அவர் என்ன சொல்லப் போகிறார் என பலரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால் அவர் மிக எளிமையான ஆசையை வெளிப்படுத்தினார். என் மகன் என்னை கட்டி அணைத்துக் கொள்ள வேண்டும் என்றார்.
இதற்குப் பிறகு நடிகர் ஷாந்தணு பாக்யராஜ் மேடைக்கு அழைக்கப்பட்டார். அப்போது அவர், படம் குறித்தும் விஜய் குறித்தும் சில விஷயங்களைப் பகிர்ந்து கொண்டார். ஷாந்தணு பேசும் போது, “கிட்டத்தட்ட 10 வருஷமா நடித்துக் கொண்டிருக்கிறேன். சில படங்கள் வெற்றியானது. சில படங்கள் தோல்வியை சந்தித்தன. அதை வைத்து பலர் என்ன என்னவோ பேசினார்கள். எனக்கு மட்டும் இல்லை பலருக்கும் இது நடந்திருக்கும்.
ஆகவே இதுதான் என் முதல் படம். விஜய் அண்ணாவுடன் ஒரு படம் பண்றேன். என்ன லைஃப் நல்லா வரணும். இங்க முக்கியமா சொல்ல வேண்டியது விஜய் அண்ணா பற்றி. சின்ன வயசுல இருந்தே விஜய்க்கு ரசிகனாக இருந்தேன். ஒரு கட்டத்திற்குப் பிறகு ‘கில்லி’ படம் வந்தது. அதுல இருந்துதான் அவரது சின்னச்சின்ன நுணுக்கங்களை எல்லாம் ரசிக்க ஆரம்பிச்சேன். அவரது தீவிர ரசிகனாக மாறினேன். அவர் கையால் தாலியை எடுத்து கொடுத்துதான் என் கல்யாணம் நடந்தது. அதற்காக அவருக்கு நன்றி” என்றார்.