நாடகத் துறையில் 25 வருடம்: நடிகர் சண்முகராஜனுக்கு விருது
நாடகத் துறையில் கடந்த 25 வருடமாக செயல்பட்டு வருவதற்காக நடிகர் சண்முகராஜனுக்கு சர்வதேச விருது வழங்கப்பட்டுள்ளது.
தமிழில், விருமாண்டி, மதுர, அந்நியன், சண்டைக்கோழி, கோச்சடையான், உத்தமவில்லன் உட்பட பல படங்களில் நடித்திருப்பவர் சண்முகராஜன். இவர் டெல்லி தேசிய நாடகப்பள்ளியில் பயின்றவர். நிகழ் என்ற நாடகக் குழுவை நடத்தி வரும் இவர் தொடர்ந்து நாடகத் துறையிலும் இயங்கி வருகிறார். இதையடுத்து அவருக்கு, ’மஜா கோயன்’ (Maja Koene) என்ற சர்வதேச விருது வழங்கப்பட்டுள்ளது.
இதுபற்றி சண்முகராஜன் கூறும்போது, ’நாடகத்துறை மூலம் தொடர்ந்து சமூக பிரச்னைகளை நாடகம் மூலம் சொல்லி வருவதற்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. சுவிட்சர்லாந்தை மையமாக கொண்டு செயல்படும் செசி (cesci) என்ற அமைப்பு, மஜா கோயனே என்பவர் பெயரில் வருடா வருடம் விருது வழங்கி வருகிறது. இந்த வருடம் எனக்கு கிடைத்துள்ளது’ என்றார்.
தற்போது, ’சண்டக்கோழி 2’, நிமிர், கரு. பழனியப்பன் இயக்கும், புகழேந்தி எனும் நான்’ உட்பட சில படங்களில் சண்முகராஜன் நடித்துவருகிறார்.