விடைபெற்றார் நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர்..
தொலைக்காட்சிகளில் காமெடி நிகழ்ச்சிகள் உருவான காலகட்டத்திலேயே பிரபலமானவர், ரோபோ சங்கர்.. ஸ்டாண்ட் அப் காமெடி, மிமிக்ரி என மேடைக் கலைஞராக தன் வாழ்வைத் தொடங்கியவரின் வாழ்க்கை, 46 வயதிலேயே முடிந்துபோனது,
சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரைக்கு சென்ற ரோபோ சங்கர், தனுஷின் மாரி, விஜயின் புலி, அஜித்தின் விஸ்வாசம், சிவகார்த்திகேயனின் வேலைக்காரன் போன்ற பெரிய ஹீரோக்களின் திரைப்படங்களில் நடித்து தன்னுடைய நடிப்பு திறமையை நிரூபித்தார்.
தொடர்ந்து பல திரைப்படங்களில் காமெடி மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்த ரோபோ சங்கர், உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு செப்டம்பர் 18-ம் தேதியான நேற்று மருத்துவமனையில் உயிரிழந்தார்.
ரோபோ சங்கரின் திரைப்பயணம்..
பெரிய திரையில் கவனம்பெறாத ரோபோ சங்கர் 2007-ம் ஆண்டு வெளியான தீபாவளி படத்தில் கூட்டத்தில் ஒருவனாக வந்துசென்றார். பின்னர் 2013ஆம் ஆண்டு வெளியான இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தில் சவுண்ட் சுதாகர் கதாபாத்திரத்தில் கவனிக்கப்பட்டார்.. 2015-ல் வெளியான தனுஷின் மாரி படத்தில் அவர் நடித்த சனிக்கிழமை கதாபாத்திரம் வரவேற்பை பெற்றுத்தந்தது.. அதன்பின் விஜயின் புலி, அஜித்தின் விஸ்வாசம், சிவகார்த்திகேயனின் வேலைக்காரன் உள்ளிட்ட பல முக்கிய படங்களில் நடித்தார்.
டைமிங் மிஸ் ஆகாத ரைமிங் காமெடி இவரின் தனித்துவம்.. அதையும் ஹீரோக்களோடு சேர்ந்து அவர் எதார்த்தமாக செய்யும்போது, திரையரங்கில் கைதட்டலுக்கு பஞ்சம் இருக்காது.. அதிலும் வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் திரைப்படத்தில் ’அன்னைக்கு காலைல 6 மணி இருக்கும் கோழி கொக்கரக்கோனு கூவுச்சு’ என்ற அவரின் தனித்துவமான காமெடி ரசிகர்களின் விருப்பமாக இருந்துவருகிறது.
காமெடியில் கவர்ந்த ரோபோ சங்கர் நடிகராக மட்டுமின்றி டப்பிங் கலைஞராகவும் திறையமை வெளிப்படுத்தியவர்.. தி லயன் கிங், முபாசா போன்ற அனுமேஷன் திரைப்படங்கள் உலக அளவில் மிக பிரபலம்.. அதன் தமிழ் டப்பிங்கில் பும்பா எனும் கதாபாத்திரத்திற்கு இவரின் குரல் சிறப்பு சேர்த்தது.. நடிகராக உடல்மொழியில் சிரிக்க வைத்தவர், குரலால் பும்பா கதாபாத்திரத்தில் ரசிக்க வைத்தார்… இப்படி, ரோபோவின் சிறப்புகளை சொல்ல செய்திகள் பல உள்ளன..
தகனம் செய்யப்படும் ரோபோசங்கரின் உடல்..
கடந்த திங்கட்கிழமை படப்பிடிப்பில் இருந்தபோது உடல்நலக்குறைவு ஏற்பட்ட நிலையில், சென்னை துரைப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் ரோபோ சங்கர் அனுமதிக்கப்பட்டார்.. மருத்துவர்கள் கண்காணிப்பில் இருந்த அவருக்கு, தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.. கல்லீரல் பாதிப்பு அடைந்த நிலையில், உடல் உறுப்புகள் செயலிழந்த காரணத்தினால் உயிர் பிரிந்ததாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
நம் வலிகளை மறக்க வைத்து சிரிக்க வைத்த கலைஞன், சத்தமின்றி மவுனித்து கிடப்பதைக் கண்டு தமிழ்த்திரையுலகம் மீளாத் துயரத்தில் இருக்கிறது, நடிகர் ரோபோ சங்கரின் மறைவுக்கு நடிகர்கள் முதல் அரசியல் தலைவர்கள் வரை அனைவரும் நேரில் வந்து அஞ்சலி செலுத்திய நிலையில், வளசரவாக்கத்தில் உள்ள மின்மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
அவருடைய இறுதி ஊர்வலத்தில் திரைத்துறையினரும், குடும்பத்தினரும் பங்கேற்றுள்ளனர். ஒரு சிறந்த நகைச்சுவை கலைஞர் மற்றும் குணச்சித்திர நடிகரை தமிழ் சினிமா இழந்துள்ளது.