நடிகை கடத்தல் வழக்கு: வீடியோவை பார்க்க நடிகர் திலீப்-க்கு அனுமதி

நடிகை கடத்தல் வழக்கு: வீடியோவை பார்க்க நடிகர் திலீப்-க்கு அனுமதி

நடிகை கடத்தல் வழக்கு: வீடியோவை பார்க்க நடிகர் திலீப்-க்கு அனுமதி
Published on

கேரள நடிகை பாலியல் துன்புறுத்தல் தொடர்பான வீடியோ காட்சிகளை காண நடிகர் திலீப்பிற்கு கேரள உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. 

கேரளாவை சேர்ந்த பிரபல நடிகை ஒருவர் கடந்த 2017-ம் ஆண்டு பிப்ரவரி 17-ம் தேதி, காரில் கடத்திச்செல்லப்பட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டதாக புகார் எழுந்தது. மேலும் அதை வீடியோவும் எடுத்ததாக கூறப்பட்டது. இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள நடிகர் திலீப் கடந்த 2017-ம் ஆண்டு ஜூலை 10-ம் தேதி கைது செய்யப்பட்டு, கொச்சி ஆலுவா கிளைச்சிறையில் அடைக்கப்பட்டார்.

சக நடிகை ஒருவரை கூலிப்படை அமர்த்தி நடிகர் திலீப் செய்த கொடுமையை கண்டித்து கேரளா மாநிலம் முழுவதும் பல்வேறு அமைப்புகள் சார்பில் போராட்டங்களும், கொடும்பாவி எரிப்பு சம்பவங்களும் அப்போது நடந்தன. 85 நாட்கள் சிறைவாசத்திற்குப் பின் கடந்த 2017 ஆண்டு அக்டோபர் 3ம் தேதி நடிகர் திலீப்பிற்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது கேரள உயர் நீதிமன்றம்.

இந்நிலையில் இந்த வழக்கில் கடந்த 2017ம் ஆண்டு நவம்பர் 11-ஆம் தேதி கேரள போலீஸார் கொச்சி அங்கமாலி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். முதல் தகவல் அறிக்கையில் 14வது குற்றவாளியாக இருந்த நடிகர் திலீப் குற்றப்பத்திரிகையில் 8வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டார். குற்றப்பத்திரிகையோடு, ஓடும் காரில் நடிகை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்ட வீடியோ காட்சிகளும் வழக்கின் முக்கிய ஆவணங்களாக நீதிமன்றத்தில் போலீஸாரால் சமர்ப்பிக்கப்பட்டன. 

போலீஸாரால் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள, பாலியல் துன்புறுத்தல் வீடியோ காட்சிகளில் குளறுபடிகள் நடந்துள்ளதாகவும், இதை நிருபிக்க அந்த வீடியோ காட்சிகளை தனக்கு வழங்குமாறும் நடிகர் திலீப் கொச்சி அங்கமாலி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனு கடந்த 2018 ஆண்டு பிப்ரவரி 7-ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது, “நடிகர் திலிப்பிற்கு வீடியோ காட்சிகளை வழங்கினால் அது வெளியில் பரவுவதற்கும், சம்பந்தப்பட்ட நடிகையை மிரட்டுவதற்கும் அதிக வாய்ப்புள்ளது” என அரசு தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.

அரசு தரப்பு வாதத்தை ஏற்ற கொச்சி அங்கமாலி குற்றவியல் நடுவர் நீதிமன்றம், நடிகை பாலியல் துன்புறுத்தல் வீடியோ காட்சிகளை வழங்க முடியாது எனவும், வீடியோ காட்சிகளை வழங்க கோரிய நடிகர் திலீப்பின் மனுவை தள்ளுபடி செய்தும் உத்தரவிட்டது. இதையடுத்து நடிகர் திலீப், வீடியோ காட்சிகளை தனக்கு வழங்க கோரி கடந்த 2018-ம் ஆண்டு ஜூன் 13-ம் தேதி கேரள உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த கேரள உயர்நீதிமன்றம் வீடியோ காட்சகிளை நடிகர் திலீப் உட்பட வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள ஆறு பேரும் கூட்டாக காண அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது.  

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com