போராடக்கூடிய மக்களின் அச்ச உணர்வை ரஜினி புரிந்து கொண்டார் என்று தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை தலைவர் காஜா முயீனுத்தீன் பாகவி தெரிவித்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த்தை அவரது போயஸ் தோட்ட இல்லத்தில் தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை சார்பில் அதன் முக்கிய நிர்வாகிகள் சந்தித்துப் பேசினர். இந்த சந்திப்புக்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த காஜா முயீனுத்தீன் பாகவி, "போராடக்கூடிய இஸ்லாமிய மக்களின் அச்ச உணர்வை ரஜினிகாந்த் புரிந்துக்கொண்டார். சட்டத்தின் பாதிப்பு குறித்து அவரிடம் தெளிவாக விளக்கினோம். ரஜினி புரிந்துக் கொண்டார். மக்களின் அச்சத்தைப் போக்க தன்னால் இயன்ற அனைத்து முயற்சிகளையும் அனைத்து வகையிலும் மேற்கொள்வேன் எனத் தெரிவித்தார். மதகுருக்கள் புரிந்து கொண்டு தான் போராடுவதாக எடுத்துரைத்தோம்" என்றார்.
மேலும் தொடர்ந்த பாகவி, “கடந்த 5 ஆம் தேதி நாங்கள் கொடுத்த அறிக்கை கண்ணியமான முறையிலிருந்ததாக கூறி அவர் எங்களைச் சந்திக்க விரும்புவதாகத் தெரிவித்தார். இன்றைய சந்திப்பும் கண்ணியமான முறையில் அமைந்தது. மத குருக்கள் தூண்டிவிடப்படுவதாக அவர் தெரிவித்த கருத்துக்குத் தெளிவான முறையில் விளக்கியுள்ளோம்" என்றார்.
முன்னதாக, தமிழ்நாடு ஹஜ் கமிட்டி தலைவர் அபு பக்கர் நேற்று நடிகர் ரஜினிகாந்த்தை அவரது இல்லத்தில் சந்தித்தது குறிப்பிடத்தக்கது.