நடிகர் ரஜினி நடிக்கும் புதிய படத்தினை நெல்சன் திலீப்குமார் இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
‘அண்ணாத்த’ படத்திற்குப்பிறகு ரஜினியின் அடுத்தப் படத்தை யார் இயக்கப்போகிறார்கள் என்பதுதான் பெரிய எதிர்பார்ப்பாக இருந்து வருகிறது. இந்த நிலையில், ரஜினியின் 169 வது படத்தினை நெல்சன் திலீப்குமார் இயக்கவுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. ‘கோலமாவு கோகிலா’, ‘டாக்டர்’ படங்களின் வெற்றியைத் தொடர்ந்து விஜய்யின் ‘பீஸ்ட்’ படத்தை இயக்கி வரும் நெல்சன் திலீப்குமார் அடுத்ததாக ரஜினியுடன் இணைகிறார்.
நெல்சன் திலீப்குமார் சொல்லிய கதை ரஜினிக்கு பிடித்துவிட்டதாகவும் சன் பிக்சர்ஸ் தயாரிக்க அனிருத் இசையமைக்கவுள்ளார் என்றும் சொல்லப்படுகிறது. ரஜினி-நெல்சன் இணையும் இப்படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு இம்மாத இறுதியில் வெளியாகவுள்ளது. இந்த ஆண்டு கோடை காலத்திலேயே படப்பிடிப்பைத் துவங்க திட்டமிட்டுள்ளனர் என்று தகவல்கள் கசிந்துள்ளன. இதனையொட்டி #Thalaivar169 என்ற ஹேஷ்டேக்கில் ட்விட்டரை தெறிக்கவிட்டுக் கொண்டு வருகிறார்கள் ரஜினி ரசிகர்கள்.