"நான் எது பேசினாலும் பிரச்னைதான்..” தர்மன் பட அறிமுக விழாவில் ரஜினி பேச்சு!
ரஜினிகாந்த் நடிப்பில் கமல்ஹாசன் தயாரிப்பில் அஷ்வத் மாரிமுத்து இயக்கும் `தர்மன்' பட அறிமுக விழா இன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், "பேச அழைக்கிறேன் எனச் சொன்னாலே பயமாக இருக்கிறது. நான் ஏதாவது பேசினாலே, எனக்கோ.. பிறருக்கோ பிரச்னை ஆகிறது. பேசாமல் அமைதியாக இருந்தால், ’வாயில் கொழுக்கட்டை வைத்திருக்கிறாரா’ என்கிறார்கள். பேசினால், `இப்போ பேசு' என்கிறார்கள். நம்மைப் பிடிக்காதவர்களுக்கு நாம் என்ன செய்தாலும் பிடிக்காது. பிடித்தவர்களுக்கு என்ன செய்தாலும் பிடிக்கும். இதற்கமுன் இந்தப் படத்தை செய்ய பலரிடம் பேசினோம்.
முதலில் இந்தப் படத்தை இயக்க ரவிக்குமாரை தேர்வு செய்தோம். பின்னர் சுந்தர் சி வந்தார், ஆனால் அவருடைய மற்ற படங்களின் ஒப்பந்தத்தால் அவர் விலகிவிட்டார். பின்னர் சிபி சக்கரவர்த்தி வந்தார். அவர் சொன்ன கதை பிடித்திருந்தாலும், அது மிகவும் சென்சிட்டிவான கதை. நியூக்ளியர் சைன்டிஸ்ட் கதை, பல்வேறு இடங்களுக்குச் சென்று படமாக்க வேண்டும். நிறைய காலம் தேவைப்படும் என்பதால் பின்னர் செய்யலாம் என நினைத்தோம். பின்பதான் அஷ்வத் இந்தப் படத்துக்கு வந்தார்.
கமல் சொன்னதுபோல எனக்கு ஏன் டென்ஷன் இருந்தது என்றால், ’நான் கதை கேட்க மாட்டேன், முழுப் பொறுப்பும் உங்களிடம் கொடுக்கிறேன்’ எனச் சொல்லிவிட்டார். அதனாலதான் டென்ஷன். ஆனால், நான் அவரை வற்புறுத்தி கதை கேட்க வைத்துவிட்டேன். என்ன சொன்னாலும் இது பெரிய பொறுப்பதான். அதற்காக மொத்த பாரத்தையும் உங்கள் மேல் வைக்கமாட்டோம். இது ஒரு குழு உழைப்பு.
கமலுக்கும் எனக்குமான நட்பு குறித்து எவ்வளவு பேசினாலும் போதாது. 70களில் அவர் மிகப்பெரிய ஸ்டார். அப்போதுதான் நான் நடிக்க வருகிறேன். ’இளமை ஊஞ்சல் ஆடுகிறது’ படம் எனக்கு பெரிய பெயர் பெற்றுத் தந்த படம். முதலில் அது ஜெய் கணேஷ் நடிப்பதாக இருந்தது. பின்பு கமல், ஸ்ரீதர் சாரிடம் சொல்லி என்னை நடிக்கவைத்தார். நாங்கள் இணைந்து நடித்த படங்கள் அனைத்திலும் எனக்கு நிறைய இடம்கொடுத்து நடிக்க வைத்தார்" என்றார்

