ரஜினியின் புதிய படம் அறிவிப்பு: அப்ப அரசியல் பிரவேசம்?
நடிகர் ரஜினிகாந்த் புதிய படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் ‘2.0’ மற்றும் ‘காலா’ ஆகிய 2 படங்களில் நடித்து வருகிறார். இதில் ‘காலா’ வரும் ஏப்ரல் மாதம் வெளியாகவுள்ளது. ‘2.0’வில் கிராபிக்ஸ் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டாமல் இழுத்துக் கொண்டுள்ளன. சில மாதம் முன்பு சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா மண்டபத்தில் ரசிகர்களுடனான சந்திப்பின் போது உரையாற்றியிருந்த ரஜினிகாந்த், “போர் வரும் போது பார்க்கலாம். அரசியலுக்கு வருவது உறுதி. வரும் சட்டமன்ற தேர்தலில் நமது படையும் இருக்கும். 234 தொகுதிகளிலும் போட்டியிடுவோம்.” என்றெல்லாம் பேசியிருந்தார். இந்தப் பேச்சுக்கள் அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியிருந்தது. அத்துடன் தனது ரசிகர் மன்றத்தை மக்கள் மன்றமாக மாற்றி, அதில் உறுப்பினர்கள் சேர்க்கை மற்றும் மாவட்ட செயலாளர்கள் நியமனம் உள்ளிட்ட பணிகளையும் அவர் முடுக்கிவிட்டார். இதனால் அவர் ‘2.0’ , ‘காலா’ ஆகிய படங்களுக்குப் பிறகு படங்களில் நடிப்பதை நிறுத்துவார், தீவிர அரசியலில் ஈடுபடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. நடிகர் கமல்ஹாசன் கட்சி ஆரம்பித்து, தீவிர அரசியலில் இறங்கியுள்ள நிலையில், இதனால் ரஜினியும் விரைவில் கட்சியை தொடங்குவார் என்றும் கூறப்பட்டது. அதற்கான பணிகள் நடைபெறுவதாகவும் தகவல்கள் கசிந்தது. இவ்வாறாக ரஜினியின் அரசியல் வருகை ஒரு தொடர் கதையாகவே இருந்து வருகிறது.
இந்நிலையில் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் புதிய படத்தில், நடிகர் ரஜினிகாந்த் கமிட் ஆகியுள்ளார். இதுதொடர்பான அதிகாரப்பூர்வ செய்தி வெளியாகியுள்ளது. கார்த்திக் சுப்புராஜ் இதற்கு முன் பீட்சா, ஜிகர்தண்டா, இறைவி ஆகிய படங்களை இயக்கியவர். கபாலிக்கு முன்னரே கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கவிருப்பதாக தகவல் கசிந்தது. இந்தச் சூழலில் ரஜினியை கார்த்திக் சுப்புராஜ் இயக்குவது உறுதியாகியுள்ளது. தற்போது கார்த்திக் சுப்புராஜ் பிரபுதேவாவை வைத்து ‘மெர்குரி’ எடுத்து வருகிறார்.