நடிகர் பிரித்விராஜுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
தமிழில் பாரிஜாதம், மொழி, ராவணன், நினைத்தாலே இனிக்கும் உள்ளிட்டப் படங்களில் நடித்தவர் பிரித்விராஜ். ‘மலையாள சினிமாவின் தந்தை’ என்று போற்றப்படுபவரும், மலையாள சினிமாவில் முதன் முதலில் பட்டியலின பெண்ணை ஹீரோயினாக நடிக்க வைத்தவருமான ஜே.சி டேனியலின் வாழ்க்கை வரலாற்றுப் படமான ’செல்லுலாய்ட்’ படத்தில் ஜே.சி டேனியலாக நடித்து பெரும் பாராட்டுகளைக் குவித்தார்.
இப்படத்திற்கு கேரள அரசின் 7 மாநில விருதுகள் கிடைத்தன என்பது குறிப்பிடத்தகது. ஜே.சி டேனியல் தமிழர் என்பதால் தமிழிலும் இப்படம் வெளிவந்து விமர்சகர்களால் கொண்டாடப்பட்டது. மலையாளத்தில் முன்னணி நடிகராக இருக்கும் பிரித்விராஜ் மோகன்லாலை வைத்து கடந்த ஆண்டு ‘லூசிபர்’ படத்தை இயக்கி இயக்குநர் அவதாரமும் எடுத்தார். இப்படம் வசூல் சாதனை செய்தது. இப்படி பன்முகத் திறமைக் கொண்ட பிரித்விராஜ் தனக்கு கொரோனா பாதித்துள்ளது என்பதை ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அந்தப் பதிவில்,
’இயக்குநர் டிஜோ ஜோஸ் அந்தோணியின் ‘ஜன கன மன’ படப்பிடிப்பில் கடந்த அக்டோபர் 7 ஆம் தேதி முதல் ஈடுபட்டு வருகிறேன். ஷூட்டிங்கில் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் விதிமுறைகளுடன் தான் அனைவரும் கலந்துகொள்கின்றனர். பாதுகாப்பு நடைமுறைகளை கடுமையாக கடைப்பிடிக்கிறோம். படப்பிடிப்பு தொடங்கும்போது அனைவரும் கொரோனா பரிசோதனை செய்துகொண்டோம். அதேபோல, இறுதி நாளன்றும் செய்துகொண்டோம்.
ஆனால், எனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதிலிருண்டு தனிமைப்படுத்திக்கொண்டேன். என்னுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள், இரண்டாம் நிலை தொடர்பில் இருந்தவர்கள் என அனைவரும் தனிமைப்படுத்திக்கொள்ளும்படி கேட்டுக்கொள்இறேன். இப்போது நான் நலமுடன் இருக்கிறேன். விரைவில் குணமடைந்து பணிக்கு திரும்புவேன்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. கொரோனா பாதித்த பிரித்விராஜுக்கு சசிதரூர் எம்.பி விரைவில் குணமடைய வேண்டும் என்று வாழ்த்துகள் கூறியுள்ளார்.