ஓடிடியில் வெளியாகும் பிரபாஸின் ‘ராதே ஷ்யாம்’ : ரிலீஸ் தேதி அறிவிப்பு

ஓடிடியில் வெளியாகும் பிரபாஸின் ‘ராதே ஷ்யாம்’ : ரிலீஸ் தேதி அறிவிப்பு
ஓடிடியில் வெளியாகும் பிரபாஸின் ‘ராதே ஷ்யாம்’ : ரிலீஸ் தேதி அறிவிப்பு

நடிகர் பிரபாஸின் ‘ராதே ஷ்யாம்’ ஓடிடியில் வெளியாகிறது.

’சாஹோ’ படத்திற்குப் பிறகு நடிகர் பிரபாஸ் ‘ராதே ஷ்யாம்’, ‘சலார்’, ‘ஆதிபுருஷ்’ உள்ளிட்டப் படங்களில் நடித்து வந்தார். இதில், ‘ராதே ஷ்யாம்’ கடந்த மார்ச் 11 ஆம் தேதி உலகம் முழுக்க தெலுங்கு, தமிழ், இந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியானது. கலவையான விமர்சனங்களைப் பெற்ற இப்படத்தில், பிரபாஸின் நடிப்பும் விஷுவல் எஃபெக்ட்ஸும் பாராட்டுக்களைக் குவித்தன. கைரேகை நிபுணராக பிரபாஸும் கலர்ஃபுல் காஸ்டியூம் ப்ளஸ் க்யூட் எக்ஸ்பிரஷன்களால் பூஜா ஹெக்டேவும் கவனம் ஈர்த்தார்கள். யூவி கிரியேஷன்ஸ் பேனரில் வம்சி மற்றும் பிரமோத் தயாரித்துள்ள இப்படத்தை ராதா கிருஷ்ண குமார் இயக்கியிருந்தார்.

ஆஸ்ட்ரோ த்ரில்லர் ப்ளஸ் காதல் கதைக்களத்துடன் வெளியான இப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிகர் சத்யராஜ், பாக்யஸ்ரீ, சச்சின் கடேகர், முரளி சர்மா என பலரும் நடித்துள்ளனர். சமீபத்தில், ‘ராதே ஷ்யாம்’ தியேட்டரில் மட்டுமே 204 கோடி வசூல் செய்ததாகவும், தியேட்டர் வெளியீட்டிற்குப் பிறகான டிஜிட்டல் மற்றும் சேட்டிலைட் உரிமைகள் ரூ.200 கோடிக்கு விற்கப்பட்டதாகவும் மொத்தம் ரூ.400 கோடியைத் தாண்டியது என்றும் அதிகாரபூர்வமாக தெரிவித்திருந்தது படக்குழு. ஒருபுறம் ரசிகர்கள் தியேட்டர்களில் ’ராதே ஷ்யாம்’ படத்தைக் கொண்டாடினாலும் படம் பார்க்காதவரக்ள் ஓடிடி ரிலீஸ் தேதியை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஒருவழியாக ’ராதே ஷ்யாம்’ ஓடிடி ரிலீஸ் தேதி வெளியாகியுள்ளது. இப்படத்தின் தியேட்டர் வெளியீட்டிற்குப் பிறகான டிஜிட்டல் உரிமையை அமேசான் பிரைம் கைப்பற்றியிருந்தது. தற்போது படம் வெளியாகி 21 நாட்கள் கழித்து ஏப்ரல் 1 ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் தெலுங்கு, தமிழ், கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாகும் என்று அமேசான் பிரைம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இதனால், பிரபாஸ் ரசிகர்களும் ஓடிடி விரும்பிகளும் உற்சாகத்தில் இருக்கிறார்கள்.

பிரபாஸ் நடிப்பில் அடுத்ததாக ஓம் ராவத் இயக்கியுள்ள ‘ஆதிபுருஷ்’ அடுத்த ஆண்டு ஜனவரி 12 ஆம் தேதி வெளியாகிறது என்று படக்குழு சமீபத்தில் அறிவித்திருந்தது. அதேபோல், ‘கேஜிஎஃப்’ இயக்குநர் பிரஷாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடித்துவரும் ‘சலார்’ 2023 கோடை விடுமுறையில் வெளியாகிறது. இப்படத்தில், நாயகியாக ஸ்ருதிஹாசன் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com