தன் முக சாயலில் பார்த்திபன்களைத் தேடும் நடிகர் பார்த்திபன்..!
’ஒத்த செருப்பு சைஸ் 7’ பட வெற்றிக்குப்பிறகு பார்த்திபன் இயக்கும் அடுத்தப் படத்தில் நடிக்க தன்னுடைய முக சாயலில் இருக்கும் நடிகர்களை தேடி வருகிறார்.
”ஒத்த செருப்பு சைஸ் 7” என்ற படத்தை இயக்கி, நடித்து, தயாரித்ததன் மூலம் உலகிலேயே முதன்முறையாக ஒருவரே இயக்கி, நடித்து, தயாரித்த முதல் படம் என்ற சிறப்பையும் பெருமையையும் தமிழ் சினிமாவிற்கு கொடுத்தார் நடிகரும் இயக்குநருமான பார்த்திபன். எப்போதும், வித்தியாசமான புதுமையான முயற்சிகளில் இறங்கி நூற்றாண்டு கண்ட தமிழ் சினிமாவை அடுத்த தளத்திற்கு கொண்டுசென்று ஆச்சர்யப்பட வைப்பது பார்த்திபனின் பாணி .
கடந்த மார்ச் 22 ஆம் தேதிமுதல் கொரோனா ஊரடங்கு இந்தியா முழுவதும் அமல்படுத்தப்பட்டதால் அனைத்து பட ஷூட்டிங்குகளும் நிறுத்தி வைக்கப்பட்டன. இந்நிலையில் தற்போது சின்னத்திரையைத் தொடர்ந்து சினிமாவிற்கு விதிகள் தளர்த்தப்பட்டுள்ள நிலையில், தனது புதுபட வேலைகளில் இறங்கியுள்ளார் பார்த்திபன்.
தனது ட்விட்டர் பக்கத்தில் அடுத்தப் படத்தில் நடிக்க தன்னுடைய உருவ சாயலில் இருப்பவர்களைத் தேடி பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவில், ”நண்பர்களே! அடுத்த படத்தில் நடிக்க என் உருவ அமைப்பை ஒத்த 10 to 50 வயதில் சற்றே அனுபவமுள்ள நடிகர்கள் தேவை!புகைப்படத்துடன் ஒரு நிமிட வீடியோவில் திறமையை பதிவு செய்து அனுப்பவும்.Please விருப்பமுள்ள அனைவரும் முயலாமல், பொருத்தமுள்ளவர்கள் அனுகவும்” என்று குறிப்பிட்டுள்ளார்.