“மாணவர்களின் குரலை நசுக்கக் கூடாது; ஒடுக்கக் கூடாது” - பார்த்திபன்
வன்முறை இல்லாத இதயம் இப்போது வேண்டும் என்று நடிகர் பார்த்திபன் கூறியுள்ளார்.
17வது சென்னை சர்வதேச திரைப்பட நிறைவு விழா இன்று நடைபெற்றது. அதில் ‘ஒத்த செருப்பு’ படத்திற்கு சிறந்த திரைப்படத்திற்கான விருது வழங்கப்பட்டது. அதனை பெற்றுக் கொண்ட பின்னர் மேடையில் பேசிய நடிகர் பார்த்திபன், “ரஹ்மான் இரண்டு ஆஸ்கர் வாங்கும்போது எவ்வளவு சந்தோஷமோ அதே சந்தோஷம் இப்போது எனக்கு உள்ளது” என்றார்.
மேலும் அவர், “அதுவும் நமது தமிழ் மண்ணில் வாங்குவது கூடுதல் மகிழ்ச்சி.இந்த விருது நாளைய இயகுனர்களுக்கான விருதாக நான் பார்க்கிறேன்.முக்கியமாக பதிவு செய்யப்பட வேண்டிய விஷயம், பிரிவினை இல்லாத இந்தியா, வன்முறை இல்லாத இந்தியாதான் இப்போது முக்கியம். மாணவர்களின் முயற்சியை நசுக்க கூடாது” என்றார்.
அதை தொடர்ந்து, “ஆஸ்கர் விருதுக்கு மத்திய அரசு ‘காப்பி’ படங்களை அனுப்புவதை தவிர்த்துவிட்டு, சிறந்த திரைப்படங்களை பரிந்துரைக்க வேண்டும். சிறிய திரைப்படங்களை எடுப்பவர்களை கீழ் சாதியாகவும், பெரிய திரைப்படங்கள் எடுப்பவர்களை மேல் சாதியாகவும் பார்ப்பதாகவும், பெரிய திரைப்படங்கள் வரும்போது, சிறிய திரைப்படங்களை திரையரங்கில் இருந்து எடுத்துவிடுவது ஏற்க முடியாது” என்றார்.
குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து பேசிய பார்த்திபன், பிரிவினை இல்லாத இந்தியா, வன்முறை இல்லாத இதயம் இப்போது வேண்டும். மேலும்மாணவர்களின் குரல் நசுக்க கூடாது; ஒடுக்க கூடாது என கூறினார்.