தமிழ் - தெலுங்கு ஹீரோக்கள் இணைந்து நடிக்கும் காலம் விரைவில் வரும்: நடிகர் நானி

தமிழ் - தெலுங்கு ஹீரோக்கள் இணைந்து நடிக்கும் காலம் விரைவில் வரும்: நடிகர் நானி
தமிழ் - தெலுங்கு ஹீரோக்கள் இணைந்து நடிக்கும் காலம் விரைவில் வரும்: நடிகர் நானி

தமிழ் ஹீரோக்களும் தெலுங்கு ஹீரோக்களும் இணைந்து நடிக்கும் காலம் விரைவில் வரும் என நடிகர் நானி தெரிவித்துள்ளார்.

எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கிய 'நான் ஈ' திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு பிரபலமான நானி, தற்போது 'ஷியாம் சிங்கா ராய்' என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படம் தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம் ஆகிய நான்கு மொழிகளில் வரும் 24ஆம் தேதி வெளியாகிறது. இதற்கான செய்தியாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. அதில் பேசிய நானி தமிழ் நடிகர்களின் படங்கள் தெலுங்கிலும், தெலுங்கு நடிகர்களின் படங்கள் தமிழிலும் வெளியாவது வழக்கமான விஷயம்தான். ஆனால் இடையில் சிறிய தடை ஏற்பட்டு இருந்தது. அது தற்போது மாறி, மீண்டும் இரு மொழிகளிலும் படங்கள் வெளியாக தொடங்கியுள்ளது. அதுமட்டுமில்லாமல் வரும் காலங்களில் தெலுங்கு நடிகர்களும், தமிழ் நடிகர்களும் இணைந்து நடிக்கும் சூழல் வருமென்று தெரிவித்தார்.

அப்படி எடுக்கும் படங்கள் இன்னும் பெரிய அளவில் ரசிகர்களை சென்றடையும் என்றும், அது ஒருமொழி படமாக அல்லாமல் தென்னிந்திய திரைப்படமாக பார்க்கப்படும் என நானி கூறினார். மேலும், தன்னுடைய ’வெப்பம்’, ’ஆஹா கல்யாணம்’ ஆகிய படங்கள் தமிழில் வசூல் ரீதியில் வெற்றி அடையவில்லை எனவும், ஒரு சரியான திரைப்படத்திற்கு தான் காத்திருந்ததாகவும், அந்த காத்திருப்பிற்கு ’ஷியாம் சிங்கா ராய்’ திரைப்படம் பொருத்தமாக இருக்கும் எனவும் அவர் கூறினார். அதேபோல் தமிழ் இயக்குநர் மணிரத்னத்தின் திரைப்படத்தில் நடிக்க வேண்டும் என்பது தன்னுடைய நீண்ட நாள் கனவு எனவும், அந்த வாய்ப்புக்காக காத்திருப்பதாகவும் தெரிவித்தார்.

நானியை தொடர்ந்து பேசிய நடிகை சாய் பல்லவி, இந்த திரைப்படம் தன்னுடைய தாய் மொழியில் வெளியானால் சிறப்பாக இருக்கும் என்று எண்ணியதாகவும், தற்போது அந்த சூழல் ஏற்பட்டிருப்பது மகிழ்ச்சி எனவும் தெரிவித்தார். அத்துடன் 'ஷியாம் சிங்கா ராய்' திரைப்படத்தில் தான் ஒரு தேவதாசி கதாபாத்திரத்தில் நடித்திருப்பதாகவும், அதற்காக சில ஆய்வுகளை செய்து நடித்ததாகவும் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com