"உங்களைச் சந்தித்ததில் பெருமைப்படுகிறேன்" ’Tourist Family’ இயக்குநரை நேரில் அழைத்து பாராட்டிய நானி!
அறிமுக இயக்குநர் அபிஷான் ஜீவின்ந்த் இயக்கத்தில், நடிகர்கள் சசிகுமார், சிம்ரன், மிதுன் ஜெய்சங்கர், கமலேஷ், யோகி பாபு, ரமேஷ் திலக், எம்.எஸ். பாஸ்கர் உள்ளிட்ட பல நட்சத்திரங்களின் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் டூரிஸ்ட் ஃபேமிலி.
ஃபேமிலி ஆடியன்ஸை கவரும் வகையில் குடும்ப திரைப்படமாக வெளிவந்த இப்படத்தை, மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் மற்றும் எம் ஆர் பி என்டர்டெயின்மென்ட் ஆகிய பட நிறுவனங்கள் தயாரித்தன.
ஸ்ரீலங்காவில் இருந்து இந்தியாவுக்கு தஞ்சம் புகும் ஒரு குடும்பத்தைப் பற்றிய கதையாக ஆரம்பிக்கும் திரைப்படம், ஹியூமராகவும், எமோசனாகவும் ரசிகர்களை கவர்ந்து வெற்றிப்படமாக வலம்வந்தது. அனைத்து நடிகர்களும் தங்களுக்கு கொடுத்த ஒவ்வொரு கதாபாத்திரத்திலும் மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தி கவனம் பெற்றனர்.
இந்நிலையில் படத்தினை பல தமிழ் திரையுலகை சேர்ந்த நடிகர்கள் பாராட்டியிருந்த நிலையில், பாகுபலி திரைப்படத்தின் இயக்குநர் ராஜமௌலியும் ’சமீபத்திய ஆண்டுகளில் பார்த்த சிறந்த சினிமா’ என்று பாராட்டி பதிவிட்டிருந்தார்.
இந்த சூழலில் தற்போது டூரிஸ்ட் ஃபேமிலி படத்தின் இயக்குநரை நேரில் அழைத்து வாழ்த்து தெரிவித்துள்ளார் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரில் ஒருவரான நானி.
டூரிஸ்ட் ஃபேமிலி இயக்குநரை நேரில் அழைத்து பாராட்டிய நானி..
எப்போதும் தமிழ் சினிமாவின் மீது மரியாதையை வெளிப்படுத்தியிருக்கும் நடிகர் நானி, சமீபத்தில் வெளியாகி எல்லோருடைய மனதையும் வென்ற டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படத்தையும் தன்னுடைய எக்ஸ் தளத்தில் மனம்திறந்து பாராட்டியிருந்தார்.
அவர் தன்னுடைய பதிவில் ”எளிமையான, மனதைத் தொடும் படங்கள், நிறைய நன்மைகளுடன் இருப்பதுதான் நமக்குத் தேவையானது. #TouristFamily அதைத்தான் நமக்கு கொடுத்துள்ளது. இப்படி ஒரு அற்புதமான படத்தை உருவாக்கிய முழு நடிகர்கள் மற்றும் குழுவினருக்கு என் நன்றிகள். இப்படியான படங்கள் தான் மிகவும் தேவை” என்று பாராட்டியிருந்தார்.
இந்நிலையில் டூரிஸ்ட் ஃபேமிலி படத்தின் இயக்குநரை நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்துள்ளார் நடிகர் நானி. இதை படத்தின் இயக்குநரான அபிஷான் ஜீவின்ந்த் நானியுடனான அற்புதமான சந்திப்பு குறித்து எக்ஸ் தளத்தில் எழுதியுள்ளார்.
அவருடைய பதிவில்குறிப்பிட்டிருக்கும் அவர், “என்ன ஒரு நாள்! உங்களைச் சந்தித்ததில் உண்மையிலேயே பெருமைப்படுகிறேன் நானி சார். நீங்கள் மிகவும் பணிவான குணமுள்ள நபர். படத்தைப் பற்றி இவ்வளவு விரிவாகப் பேசிய விதம் எனக்கு அதை மேலும் சிறப்பாக்கியது. நன்றி” என பதிவிட்டுள்ளார்.