மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் மற்றும் லியோ முதலிய ஹிட் திரைப்படங்களை கொடுத்து திரையுலகில் தனக்கென தனி முத்திரை பதித்தவர் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். தமிழ் சினிமாவிற்கு மட்டுமில்லாமல் இந்தியா சினிமாவிற்கே புதிய விசயமாக அவர் கொண்டுவந்த சினிமாட்டிக் யுனிவர்ஸ் ஆனது, இந்திய ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்றது.
லோகேஷ் சினிமாட்டிக் யுனிவர்ஸ் என்பதை வெறும் பேச்சோடு நிறுத்திவிடமால், கைதி, விக்ரம் மற்றும் லியோ என மூன்று திரைப்படங்களையும் அவருடைய சினிமாட்டிக் யுனிவர்ஸ்க்குள் இணைத்து கொண்டுவந்திருக்கும் லோகேஷ் கனகராஜ், அவருடைய அடுத்த படமான ‘கூலி’ திரைப்படத்தை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து இயக்கிவருகிறார்.
கூலி திரைப்படத்தில் ரஜினிகாந்துடன் நீண்ட இடைவெளிக்கு பிறகு சத்யராஜ் நடித்து வருகிறார். உடன் ஸ்ருதிஹாசன், மாஸ்டர் மகேந்திரன் முதலியோர் சேர்ந்து நடிப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில்தான், படத்தின் நடிக்கும் நடிகர்களின் கேரக்டர் அறிவிக்கப்படும் என பதிவிட்ட படக்குழு, படத்தில் இணைந்து நடிக்கும் நடிகர்களையும் அவர்களுடைய கேரக்டரின் பெயர்களையும் ஒன்றன்பின் ஒன்றாக அறிவித்துவருகிறது.
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மற்றும் படக்குழு கூலி திரைப்படத்தில் நடிக்கவிருக்கும் நடிகர்களின் கேரக்டர்கள் அறிவிக்கப்படும் என கூறிய மறுநாளில், மலையாள நடிகர் சௌபின் ஷாஹிர் தயாள் கேரக்டரில் நடிப்பதாக முதல் அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இந்நிலையில், இரண்டாவது நாளான இன்று மூத்த நடிகர் நாகர்ஜுனா சைமன் கேரக்டரில் நடிப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் நாகர்ஜுனாவின் பிறந்தநாளான இன்று இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து லோகேஷ் கனகராஜின் பதிவை பகிர்ந்து பேசியிருக்கும் நாகர்ஜுனா, “கைதி படத்திலிருந்தே உங்களுடன் பணியாற்ற வேண்டும் என காத்திருந்தேன். கூலி படத்தில் என்னை இணைத்ததற்கு நன்றி லோகேஷ். புதிய படத்தில் ஒன்றாக இணைந்து பயணிக்க ஆர்வமாக உள்ளது. தலைவருடன் ஒன்றாக சேர்ந்து நடிப்பதற்கு ஆவலாக காத்திருக்கிறேன்” என்று பகிர்ந்துள்ளார்.
அதற்கு ரிப்ளை செய்திருக்கும் லோகேஷ் கனகராஜ், “நீங்கள் படத்தில் இணைந்தது எங்கள் பயணத்திற்கும் மிகவும் உற்சாகமாக உள்ளது சார். இன்றைக்கு உங்களுக்கு சிறந்த நாளாக இருந்திருக்கும் என நம்புகிறேன்” என்று பதிலளித்துள்ளார்.