மலையாள சினிமாவில் பெண்கள் எதிர்கொண்ட பாலியல் தொல்லைகள் குறித்த நீதிபதி ஹேமா குழுவின் அறிக்கை மிகப்பெரிய அதிர்வுகளை ஏற்படுத்தி வருகிறது. இதனை தொடர்ந்து, மலையாள திரையுலக பாலியல் விவகாரம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள சிறப்பு விசாரணை குழு அமைக்கப்பட்டது. அந்த குழு ஏற்கெனவே புகார் தெரிவித்த நடிகைகளை நேரில் சந்தித்தும், தொலைபேசியில் அழைத்தும் வாக்குமூலம் பெற்று வழக்குப்பதிவு செய்து வந்தனர்.
அதன்படி, நடிகர்கள் முகேஷ் மாதவன், சித்திக், ஜெயசூர்யா மற்றும் இயக்குநர்கள் ரஞ்சித், வி.கே.பிரகாஷ் உட்பட 9 பேர் மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், பாலியல் துன்புறுத்தல் புகார்கள் பல நடிகர்கள் மீது கூறப்பட்டுள்ளதால் மலையாள நடிகர்கள் சங்கம் (அம்மா) கலைக்கப்பட்டது. எனினும், இந்த சம்பவத்திற்கு மூத்த மோகன்லால் எந்த கருத்தும் சொல்லாமல் மவுனம் காத்து வந்தது பேசுபொருளானது.
இந்த நிலையில், மலையாள திரையுலக பாலியல் விவகாரம் தொடர்பாக நடிகர் மோகன்லால் கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர், ”ஹேமா கமிட்டி அறிக்கையை வரவேற்கிறேன்; விசாரணை நடைபெற்று வருகிறது; தவறு செய்தவர்கள் கண்டிப்பாக தண்டிக்கப்பட வேண்டும். பாலியல் புகாரால் மலையாள திரையுலகில் உள்ள கடைநிலை தொழிலாளர்கள் பாதிக்கப்படக்கூடாது.
மலையாள திரையுலகில் 21 சங்கங்கள் உள்ள நிலையில் 'அம்மா' மட்டுமே எப்படி பொறுப்பேற்க முடியும்? விவகாரம் நீதிமன்றத்தில் இருக்கும்போது எப்படி பேச முடியும்? தற்போதைய பிரச்னைக்கு மலையாள திரைப்பட சங்கம் (அம்மா) அமைப்பை மட்டுமே குறைசொல்வதில் நியாயமில்லை; மலையாள திரையுலகம் பாதிக்கப்படக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறேன். நான் எங்கேயும் ஓடி ஒளியவில்லை; இங்குதான் இருக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.