விடைபெற்றார் நடிகர் மயில்சாமி... கண்ணீர் கடலில் வழியனுப்பிய திரையுலகம்

விடைபெற்றார் நடிகர் மயில்சாமி... கண்ணீர் கடலில் வழியனுப்பிய திரையுலகம்
விடைபெற்றார் நடிகர் மயில்சாமி... கண்ணீர் கடலில் வழியனுப்பிய திரையுலகம்

மாரடைப்பால் காலமான பிரபல நகைச்சுவை நடிகர் மயில்சாமியின் உடல், சென்னை வடபழனியில் உள்ள ஏவிஎம் மின்மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

பிரபல நகைச்சுவை நடிகர் மயில்சாமி நேற்று (பிப்ரவரி 19) அதிகாலையில் மாரடைப்பால் உயிரிழந்தார். முன்னதாக அவர் நேற்று முன்தினம் இரவில், சென்னை வண்டலூர் மேகநாதீஸ்வரர் கோயிலில் நடைபெற்ற சிவராத்திரி விழாவில் கலந்து கொண்டு 19ம்தேதி அதிகாலை 3.30 மணியளவில்தான் வீடு திரும்பியிருக்கிறார். அப்பொழுது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அவரை சென்னை போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றுள்ளனர் அவரது குடும்பத்தினர்

ஆனால் வழியிலேயே அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவமனை தெரிவித்ததையடுத்து, அவரது உடல் சாலிகிராமத்தில் உள்ள அவரது இல்லத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. பின் நேற்று நாள் முழுவதும் திரையுலகினர் மற்றும் பொதுமக்களின் அஞ்சலிக்காக மயில்சாமியின் உடல் வைக்கப்பட்டது. இதனை அடுத்து அரசியல் கட்சி தலைவர்கள், நடிகர்கள், உறவினர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் மயில்சாமிக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.

இந்நிலையில் இன்று காலை சரியாக 9 மணியளிவில் அவர்களது குடும்ப வழக்கப்படி, இறுதி சடங்குகள் முடிக்கப்பட்டு மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த மயில்சாமியின் உடல், இறுதி ஊர்வலத்துக்கு புறப்பட்டது. வாகனத்தில் கொண்டுசெல்லப்பட்ட மயில்சாமியின் உடல், வடபழனியில் உள்ள மின்மயானத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. முதலில் சாலிகிராமம் வீட்டிலிருந்து விருகம்பாக்கம் காவல்நிலையம் வழியாக, 80 அடி சாலையை இறுதி ஊர்வலம் அடைந்த்து. பின் அங்கிருந்து ராஜமன்னார் சாலை வழியாக சுமார் 1 மணி நேர ஊர்வலத்திற்கு பின்பு ஏவிஎம் மின் மயானத்தில் நிறைவு பெற்றது்.

எம்.எஸ்.பாஸ்கர், இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா உள்ளிட்ட திரைபிரபலங்கள், தமிழ்நாடு சட்டப்பேரவையின் துணை சபாநாயகரும் மயில்சாமியின் சம்பந்தியுமான கு.பிச்சாண்டி மற்றும் பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானோர் மயில்சாமியின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டு, மறைந்த நகைச்சுவை நடிகர் மயில்சாமிக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தி பிரியாவிடை அளித்தனர். தொடர்ந்து வடபழனியில் உள்ள மின் மயானத்தில் மயில்சாமிக்கு இறுதி சடங்குகள் செய்யப்பட்டு உடல் தகனம் செய்யப்பட்டது. மயில்சாமியின் சிதைக்கு அவரது இளைய மகன் யுவன் தீ மூட்டினார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com