தொடர் பாராட்டு மழையில் ‘அசுரன்’: புகழ்ந்து ட்வீட் செய்த மகேஷ் பாபு
‘அசுரன்’ படத்திற்கு தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு பாராட்டுகள் தெரிவித்துள்ளார்.
எழுத்தாளர் பூமணி எழுதிய நாவல் ‘வெக்கை’. இந்தக் கதையை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட திரைப்படம்தான் ‘அசுரன்’. தனுஷ் வெற்றிமாறன் கூட்டணியில் உருவாகியிருக்கும் இப்படத்ளதில், மஞ்சு வாரியர், பசுபதி, பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படம் திரையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மட்டுமில்லாமல் மக்கள் மத்தியிலும் நல்ல பாராட்டை பெற்று வருகிறது.
அதேபோல் சினிமாத்துறையினர் மட்டுமின்றி அரசியல் பிரமுகர்கள் என பலரும் ‘அசுரன்’ படத்திற்கு பாராட்டுகள் தெரிவித்து வருகின்றனர். நல்ல வரவேற்பை பெற்ற ‘அசுரன்’ படம், விமர்சனம் ரீதியாக மட்டுமல்லாமல் வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றுள்ளது. அசுரன் ரூ.100 கோடி வசூல் செய்ததாக தயாரிப்பாளர் தரப்பு அதிகாரப்பூர்வமாக சமீபத்தில் அறிவித்தது.
இந்நிலையில் தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு அசுரன் படத்துக்கு பாராட்டுகள் தெரிவித்துள்ளார். இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், ''அசுரன் உண்மை மாறாத தீவிரமான திரைப்படம். சிறந்த சினிமா. படக்குழுவினருக்கு வாழ்த்துகள்'' என தெரிவித்துள்ளார்.