சினிமாவை போல வாழ்க்கையை நினைத்தீர்களா?: ஜெய்யிடம் நீதிபதி கேள்வி
சினிமா போல வாழ்க்கையையும் நினைத்தீர்களா? என்று நடிகர் ஜெய்யிடம் சென்னை சைதாப்பேட்டை நீதிமன்ற நீதிபதி கேள்வி எழுப்பினார்.
திரைப்பட நடிகர் ஜெய் கடந்த 21ஆம் தேதி குடிபோதையில் காரை ஓட்டி சென்னை அடையாறு மேம்பாலத்தில் விபத்தை ஏற்படுத்தினர். அது தொடர்பான விசாரணைக்கு நேரில் ஆஜராக சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால், அவர் ஆஜராகாததால் 2 நாட்களில் கைது செய்து ஆஜர்படுத்த நீதிபதி உத்தரவிட்டார். அவரை கைது செய்யச் சென்ற காவல்துறையினர் ஜெய் தலைமறைவாகிவிட்டார் என தெரிவித்திருந்த நிலையில், இன்று காலை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஜெய் சரணடைந்தார்.
அவரிடம் வாழ்க்கையையும் சினிமா போல நினைத்தீர்களா? என கேள்வி எழுப்பிய நீதிபதி காரில் கருப்பு நிற ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளதா என கேட்டார். அதற்கு ஜெய் ஆம் என்று பதிலளித்தார். அதற்கு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? என்று காவல்துறையிடம் கேள்வி எழுப்பினார் நீதிபதி.