தமிழ்ப் பெண்களுக்கு துணிச்சலில்லை: அண்ணாச்சி பேச்சால் சலசலப்பு
ரசிகர்கள் எதிர்பார்க்கும் வகையில் நடிக்க, தமிழ் நடிகைகளுக்கு துணிவில்லை என்று கும்பகோணம் அருகே நடைபெற்ற கல்லூரி நிகழ்ச்சியில் நடிகர் இமான் அண்ணாச்சி பேசியது மாணவிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.
கும்பகோணம் அருகில் உள்ள கோவிலாச்சேரி கல்லூரி ஒன்றில் விவசாயிகள் பற்றிய கருத்தரங்கம் நடைபெற்றது. இதில், தெரு நாய்கள் என்ற திரைப்படக் குழுவினர் கலந்து கொண்டனர். இதில் மாணவ- மாணவிகளுக்கு மரக் கன்றுகளை வழங்கி இயற்கை வளத்தை காக்கும் முக்கியத்துவத்தை அவர்கள் உணர்த்தினர்.
அப்போது மாணவி ஒருவர், தமிழகத்தில் ஏராளமான நடிகைகள் இருக்கும் போது, தெருநாய்கள் படத்தில் கர்நாடகாவைச் சேர்ந்த அர்ஷதாவை நடிக்க வைக்க என்ன காரணம் என்றார்.
இதற்கு பதிலளித்த இமான் அண்ணாச்சி, தமிழகப் பெண்கள், கலாசாரம் எனக் கூறி ரசிகர்கள் எதிர்பார்க்கும் வகையில் நடிப்பதில்லை என்றும், எனவே மற்ற மாநில நடிகைகளைக் கொண்டு திரைப்படத்தை எடுக்க வேண்டிய நிலை உள்ளதாக தெரிவித்தார். அண்ணாச்சியின் பேச்சைக் கேட்ட மாணவிகள் மத்தியில் சலசலப்பு ஏற்பட்டது. மாணவிகள் சிலர் அவருக்கு எதிராக முழக்கமிட்டனர்.