நடிகர் ஹரிஷ் கல்யாணுக்கு விரைவில் கல்யாணம் - ட்விட்டரில் அறிக்கை
நடிகர் ஹரீஷ் கல்யாண் விரைவில் நர்மதா உதயகுமார் என்பவரை திருமணம் செய்ய உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நடிகை அமலாபால் தமிழில் அறிமுகமான 'சிந்து சமவெளி' திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமானவர் ஹரீஷ் கல்யாண். இதையடுத்து 'அரிது அரிது', 'பொறியாளன்', 'வில் அம்பு', ‘பியார் பிரேமா காதல்’, ’தாராள பிரபு’ , ‘ஓ மணப்பெண்ணே’ போன்ற சில படங்களில் ஹீரோவாக நடித்தார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் பரபரப்பான ஹரீஷ் கல்யாண், இசையமைப்பாளர் யுவன் சங்கர்ராஜா தயாரித்த 'பியர் பிரேமா காதல்' படத்தில் நடித்து பிரபலமானார்.
தற்போது சசியின் இயக்கத்தில் 'நூறு கோடி வானவில்' படத்தில் நடித்துள்ளார். இந்த நிலையில், நடிகர் ஹரீஷ் கல்யாணுக்கு திருமண ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகக் கூறப்பட்டது. இந்த நிலையில், இன்று தனது ட்விட்டர் வாயிலாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அவர் தனக்கு நர்மதா உதயகுமார் என்பவருடன் திருமணம் நடைபெற இருப்பதாக சமூக வலைத்தளப் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.